இலங்கையில் நடைபெவுள்ள பொதுநலவாய மாநாடு தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திமுகவும், டெசோ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர்களும் ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கூட பொதுநலவாய மாநாட்டினை இலங்கையிலே நடத்தக் கூடாது என்றும், அதற்கு இந்திய அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் தொடர்ந்து கேட்டுக் வருகின்றனர்.
பல்வேறு தமிழ் அமைப்புகளும் தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இந்திய அரசு அதைப் பற்றி எந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை. ‘டெசோ’ இயக்கத்தின் சார்பில் காமன்வெல்த் நாடுகளின் தூதுவர்களையெல்லாம் சந்தித்து இலங்கையிலே பொதுநலவாய மாநாட்டினை நடத்தக் கூடாது என்ற வேண்டுகோளையும் அதற்கான விளக்கத்தையும் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியிருக்கிறார்கள்.
ஆனால் பொதுநலவாய மாநாட்டினை இலங்கையிலே நடத்திட முடிவு செய்யப்பட்டு விட்டது என்பதைப் போல இலங்கையில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கனடா நாட்டின் சார்பில் இலங்கை பொதுநலவாய மாநாட்டினைப் புறக்கணிப்பது எனத் தெரிவிக்கப்பட்டு விட்டது. பல்வேறு மனித உரிமை அமைப்புகள் – குறிப்பாக பொதுநலவாய மனித உரிமை அமைப்பு, அவுஸ்திரேலிய மனித உரிமை சட்ட மையம் போன்றவை இலங்கையில் இந்த மாநாட்டினை நடத்தக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.
பிரிட்டிஷ் இராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இளவரசர் சாள்ஸ்சை அனுப்பி வைக்க இருக்கிறார் என்றும் செய்திகள் வந்துள்ளன. பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பு என்று ஒன்று உருவாக்கப்பட்ட பிறகு இதுவரை நடைபெற்ற அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்ட எலிசபெத் ராணி இலங்கை மாநாட்டினைப் புறக்கணித்திருப்பது என்பது முக்கியமான விடயமாகும்.
பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதற்காக அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் பிரேசர் ஆதரவு தெரிவித்துள்ளார். ‘பொதுநலவாய’ சட்ட மாநாடு ஒன்று ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 18ஆம் திகதி வரை தென்னாப்பிரிக்காவில் உள்ள ‘கேப்-டவுன்’ நகரத்தில் நடைபெற்றபோது பொதுநலவாய நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில், பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும். தொடர்ந்து இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுநலவாய நாடுகள் பேணிவரும் அடிப்படை கொள்கை மீறல்கள் ஆகியவற்றின் காரணமாக இலங்கையை நீக்குவது முக்கியமானது. பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்கள்.
இலங்கை போர்க் குற்றம் புரிந்த நாடு என்று ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழு வின் அறிக்கைக்குப் பிறகும், இலங்கையில் நவம்பர் மாதத்தில் பொதுநலவாய மாநாடு நடைபெறுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. இனப் படுகொலை, மனித உரிமை மீறல்கள், என பல்வேறு வகையான போர்க் குற்றங்களுக்கு ஆளாகியுள்ள இலங்கையை நம்பிக்கையுடன் கூடிய சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணைக் கமிஷன் முன் நிறுத்தவேண்டுமென ‘டெசோ’ தொடர்ந்து கோரி வருகிறது.
பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அதன் காரணமாகவே அடுத்த இரண்டாண்டுகளுக்கு பொதுநலவாய அமைப்பின் அவைத் தலைவராக ராஜபக்ஷ இருப்பாரென்றும், அதனால் 54 நாடுகளைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது பிரச்சினையாக ஆகி விடக் கூடுமென்றும், வலிமையான கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக் கொண்டு, அதிலே கலந்து கொள்ளுமேயானால், அங்கே நடைபெற்ற இனப்படுகொலைகளை இந்தியா ஆதரித்தது போலாகி விடும்.
எனவே இனியாவது இந்தியா தமிழர்களும் இந்தியர்களில் ஒரு பிரிவினர் தான் என்ற உள்ளுணர்வோடும் நேசத்தோடும் ஆதரவுக் கரம் நீட்ட முன் வர வேண்டும். தமிழக மக்கள் மற்றும் உலகத் தமிழர்களின் இந்த வேண்டுகோளையாவது இந்தியா ஏற்றுக்கொண்டு, இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்ற அறிவிப்பினை உடனடியாகச் செய்வதோடு பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறாத வகையில் மற்ற உறுப்பு நாடுகளின் ஆதரவையும் திரட்டும் முயற்சியையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ற வியூகம் வகுத்துச் செயல்பட வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.