மண்ணு கார் வாங்கிய கதை – சு.ப.உதயகுமார்

கார் ஷோ ஒன்றுக்குப் போய் தனக்கு ஒரு கார் தேர்ந்தெடுத்துவிட்டு வருமாறு அந்த எஜமானர் நம்ப மண்ணுவை அனுப்பி வைத்தார். கார் ஷோ உள்ளேப் போவதற்கு நுழைவுக் கட்டணம் கட்ட வேண்டும். எஜமானர் கொடுத்தக் காசை மண்ணு தின்று ஏப்பம் விட்டுவிட்டதால், உள்ளேப் போக வழியில்லாமல் திகைத்து நின்றார். அப்போது அந்தப் பக்கம் வந்த ஒரு ரஷ்யாக்காரன் மண்ணுவின் ஊழல் கதையைக் கேட்டுவிட்டு, “உள்ளே அழைத்துப் போகிறேன். ஆனால் என் கடையிலிருந்துதான் கார் வாங்க வேண்டும்” என்று பேரம் பேசினான். மண்ணுவுக்கு என்ன நஷ்டம், உடனடியாக ஒத்துக் கொண்டார்.

எஜமானரிடம் போய் ரஷ்ய கார் பற்றி பிரமாதமாகப் புகழ்ந்துரைத்தார் மண்ணு. ரஷ்ய கார் கம்பெனியே லோன் தருவதாகவும் மண்ணு சொன்னார். எஜமானரும் பொருளாதார மேதை மண்ணுவை நம்பி அந்தக் காரையே வாங்கி விடுவோம் என்று முடிவெடுத்தார்.

காருக்கு அது வாங்க வேண்டும், இது வாங்க வேண்டும், லோன் பணம் இவற்றையெல்லாம் உள்ளடக்காது என்று கதை விட்டு, எஜமானரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக காசு வாங்கி தனது பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தார் மண்ணு. காசு போய்க் கொண்டிருந்தது, ஆனால் கார் வந்த பாடில்லை. லோனுக்கான வட்டி மட்டும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

வேறு இடத்தில் கார் வாங்கி விடுவேன் என்று மிரட்டி ரஷ்யாகாரனிடம் பல உதவிகளையும், சலுகைகளையும் இரகசியமாகப் பெற்று வந்தார் மண்ணு. மண்ணுவின் காட்டில் ஓவென்று மழை பெய்து கொண்டிருந்தது. தின்று, விளையாடி இன்புற்றிருந்தார் மண்ணு.

தனது வியாபாரம் பாதிக்கப்படுவதையும், மண்ணு டபுள் ஏஜெண்டு வேலை செய்வதையும் அறிந்துகொண்ட ரஷ்யாகாரன் மண்ணுவை விரட்ட ஆரம்பித்தான். அதுவரை விட்டுப் பிடித்துக் கொண்டிருந்த எஜமானரும் துரத்த ஆரம்பித்தார்.

ஏதோ கொஞ்சம் காசை ரஷ்யாகாரனிடம் கொடுத்து ஒரு காயலாங்கடை காரை தயார் படுத்தி வைக்கச் சொன்னார் மண்ணு. “இதுதான் உங்கள் கார், விரைவில் வேலை முடிந்துவிடும்” என்று காட்டிக் காட்டியே கொஞ்ச நாளைத் தள்ளிவிட்டார் நம்ப மண்ணு. லாபமிழந்த ரஷ்யாகாரனும், பொறுமையிழந்த எஜமானரும் சேர்ந்து துரத்த, ஒருநாள் மண்ணு கார் கடைக்கு எஜமானருடன் போக வேண்டியதாயிற்று.

காரிலே பெட்ரோல் போடுங்கள், ஓட்டிச் சென்று விடுவோம் என்றார் எஜமானர். எரிபொருள் ஏற்றி ஆயிற்று, கார் நகருவதாக இல்லை. எஜமானர் மண்ணுவை முறைத்தார். மண்ணு ரஷ்யாகாரனைப் பார்த்தார். ரஷ்யாகாரன் காரைப் பார்த்தான். கார் இவர்களைப் பார்த்தது. இவர்கள் மூவரும் காரை சுற்றிச்சுற்றி வந்தனர்.

ரஷ்யாகாரன் மெல்லச் சொன்னான்: “பக்கத்துக் கடையில் வாங்கிப் பொருத்திய வால்வுகளில்தான் பிரச்சினை, சரி செய்து விடலாம்.” அவசரம் அவசரமாக வால்வுகளை மாற்றினார்கள். காரை ஓட்ட முயற்சித்தால் வயர்கள் எல்லாம் எரிந்துவிட்டன. “செக் நாட்டு வயர்கள் மோசமானவை” என்று முனகிக் கொண்டே ரஷ்யாகாரன் காரை செப்பனிட முயற்சித்தான்.

இதற்கிடையே கார் ஷோரூமில் வேலை பார்த்துவந்த உயர் அதிகாரிகள் எல்லோரும் சுந்தரமான ஓர் அப்பாவி மனிதரைப் பிடித்து மானேஜராக அமர்த்திவிட்டு ஒவ்வொருவராக கழற்றிக் கொண்டு போய்விட்டார்கள். ரஷ்யாக்காரனும், மண்ணுவும் காரைச் சுற்றிச்சுற்றி வர, எந்திரம் வாங்கும் எஜமானரும், சுந்தரமான மானேஜரும் அப்பாவிகளாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடையில் கார்களைத் துடைக்கும் வேலை பார்த்த ஒரு நபர் மட்டும் “இன்னும் 15 நாளில் ஓடிவிடும், இன்னும் 15 நாளில் ஓடிவிடும்” என்று அவ்வப்போது சொல்லி அனைவரையும் ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார்.

பிரச்சினைப் பெரிதாகவே, அருகேயிருந்த துச்சநீதி மன்றத்துக்குப் போயிற்று. தான் திருடியது வெளியே வராமலிருக்க மண்ணு ரஷ்யாக்காரன் முதுகைச் சொறிந்தார். ரஷ்யாக்காரன் தான் திருடியதை பிறர் அறியாமலிருக்க மண்ணு முதுகைச் சொறிந்தான். எந்திரம் வாங்கும் எஜமானரும், சுந்தரமான மானேஜரும் அப்பாவிகளாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த நீதி-பாதி, மீதி பாதியைக் கண்ணுற்றவாறே தீர்ப்பு சொன்னார். நாட்டின் கார் வாங்கும் (களவாங்கும்) கொள்கையை ஆதரிப்பதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு கார் வாங்குவது (களவாடுவது) அவசியம் என்பதால், கார் வாங்குவதற்கு (களவாடுவதற்கு) தடை விதிக்க முடியாது என்றும், கார் வாங்கும்போது கார் வாங்குபவர் நார், நாராக உரிக்கப்பட்டாலும், நாட்டின் ஓட்டு மொத்த நலனுக்காக அனைவரும் கார் வாங்கியே தீர வேண்டும் என்றும், கார் வாங்கும்போது, வால்வுகள், வயர்கள் எல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கார் வாங்கியவரும், கார் விற்றவரும், கார் துடைப்பவரும் அறிக்கைகள் தயாரித்து தமக்குள் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்றும் பணித்தார்.

“வெற்றி, வெற்றி” என்று மண்ணுவும், ரஷ்யாக்காரனும், கார் துடைப்பவரும், குதித்துக் கொண்டிருக்க, காரை ஓட்டிக்காட்ட வேண்டிய மானேஜர் சோகமாக அமர்ந்திருந்தார். எஜமானர் “நான் ஓட்ட வாங்கும் வாகனமா? என்னைக் கொல்ல வந்த மோகினியா?” என்று சோக கீதம் பாடிக் கொண்டிருந்தார். எரிபொருள் நிரப்பிய கார் இவர்கள் மத்தியில் ஆடாமல், அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது.

(மீதியை வெள்ளித் திரையில் காண்க!)

சு.ப.உதயகுமார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *