ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக தமது கருணை மனு எந்த அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது என்று பேரறிவாளன் அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகள் கேட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இந்நிலையில் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்திடம் பேரறிவாளன் விளக்கம் கேட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி மத்திய தகவல் ஆணையர் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேரறிவாளனுடன் பேசினார். ஆனால் சில தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அது தடைப்பட்டது. இந்நிலையில் மத்திய தகவல் ஆணையர் சுஷ்மா சிங் நேற்று பிற்பகல் மீண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுடன் பேசினார்.
அப்போது தனது கருணை மனுவை குடியரசுத் தலைவர் எந்த அடிப்படையில் நிராகரித்தார் என்பதற்கான விளக்கங்களை அவர் கேட்டுள்ளார். பின்னர் இந்த வீடியோ கான்பரன்சிங் விசாரணை குறித்து பேரறிவாளனின் வழக்கறிஞர் சுரேந்தர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மத்திய தகவல் ஆணையருடன், மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளரும் சுமார் 30 நிமிடங்கள் பேரறிவாளனுடன் உரையாற்றியதாகத் தெரிவித்தார். அப்போது தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் அது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கும் இடையே நடைபெற்ற ஆலோசனைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு பேரறிவாளன் கேட்டு கொண்டதாக வழக்கறிஞர் கூறினார்.
தங்களது கருணை மனு மீது குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க காலம் தாழ்த்தியதால் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று ராஜீவ் கொலை தொடர்பாக தண்டனை பெற்றுள்ள மூவரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்து, அதன் மீதான விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.