உலகிலேயே முதன்முதலாக திருவாசகத்திற்கென்று கல்வெட்டுக்களைக்கொண்ட அரண்மனை ஒன்று சிவபூமியாகிய இலங்கை- யாழ்ப்பாணம்- நாவற்குழியில் நிறுவப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையிலேயே சிவ தட்சிணாமூர்த்திக்குரிய திருக்கோவில் ஒன்றும் இதனுடன் நிறுவப்பட்டு 24.6.2018 அன்று திறக்கப்பட்டுள்ளது. சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தினால் நிறுவப்பட்ட சிவபூமி திருவாசக அரண்மனை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவதட்சணாமூர்த்தி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகப் பெருவிழா நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இடம்பெற்றது. இலங்கையிலேயே முதன் முறையாக சிவதட்சணா மூர்த்திக்கெனத் தனியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயம் இதுவாகும். சிவதட்சணா மூர்த்தியின் திருவுருவச் சிலை நான்கரை அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெவிட்டாத இன்பத்தமிழ்த் திருவாசகத் தேன் துளிகள் கருங்கல்லில் உருப்பெரும் அளப்பெரும் பணி. வாழும் தலைமுறைக்கும் வருகின்ற தலைமுறைக்கும் அமிழ்தினுமினிய தமிழின் வரலாற்று பெருமை சொல்ல நாவற்குழியில் திருவாசகத்திற்கு ஓர் அரண்மனை அமைக்கப்பட்டது.
சமய சமூகப்பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்த கலாநிதி. ஆறு.திருமுருகன் ஐயாவின் பெரு முயற்சியின் விளைவாய் சுற்றியும் திருவாசக வரிகள் கருங்கல்லில் உருப்பெற, மணிவாசகரை தடுத்தாட்கொண்ட தட்சணாமூர்த்திக்கோர் ஆலயமும் மத்தியில் இலங்க, இலங்கையின் முதலாவது கருங்கல் தேரில் சிவலிங்கத்துடன் மணிவாசகர் காட்சி தர யாழ்ப்பாணத்தின் அடையாளமாய் அரும் பெரும் சொத்தாய் அமைகிறது திருவாசக அரண்மனை.
தேடிச்சென்று காணுங்கள் தெவிட்டாத இன்பத்திருவாசகத்தேனை பருகுங்கள்
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என உணர்ச்சி வயப்பட்டு பல தடவைகள் நாங்கள் பேசுவதுண்டு. உண்மைதான் தமிழனாக நாம் தலைநிமிர பல காரணங்களை பட்டியலிட முடியும். தமிழை பத்தியின் மொழி என அழைப்பார்கள். அந்த உயர்ந்த இடத்தை தமிழுக்குப் பெற்றுக்கொடுத்த பெருமை திருவாசகத்துக்குரியது. அதையும் தாண்டி தமிழ் செம்மொழி அந்தஸ்துப் பெற காரணமானவை தமிழின் நீண்ட பாரம்பரிய தொடர்ச்சியான மரபுசார் இலக்கியங்கள். அவற்றுள் இன மத மொழி கடந்து உலகின் அத்தனை மனிதர்களையும் ஈர்த்த பெருமை இரண்டு இலக்கியங்களுக்கு உண்டு. ஒன்று உலகப் பொதுமறை திருக்குறள். மற்றையது தேனினும் இனிய திருவாசகம்.
காலம் தீர்மானித்த ஒரு விடயம் தான் நாவற்குழி திருவாசக அரண்மனை.�அதனையும் நாவற்குழியில் அமைக்கவேண்டும் என காலம் தீர்மானித்த சூட்சுமம் சற்று ஆழமாகச் சிந்திப்பின் மனதுக்கு ஆறுதல் தரும். யாழ்பாணத்தின் நுழைவாயிலில் நுழைய ‘எத்தனிப்பவர்களுக்கும்’ உள்வருவோருக்கும் யாழ்ப்பாணம் தமிழின் நிலம் சைவத்தின் தேட்டம் என்பதை உணர்த்தும் காலச் சின்னமாக திருவாசக அரண்மனை என்றும் நிலைக்கும்.
நாம் சைவத் தமிழர்கள் என தலைநிமிர வைக்கும் மையப்புள்ளியாக திருவாசகம் எம்மை இயக்கட்டும். தமிழர்களாய் நாம் ஒற்றுமைப்பட வேண்டிய காலத்தில் பல்வேறு அடிப்படைகளில் நாம் சிதறுண்டு போகாதிருக்க காலம் நமக்கு காட்டும் சகுனமாக திருவாசக அரண்மனை திகழ்கின்றது. எனவே காலத்தீர்மானத்தை கவனம்கொள்வோமாக.
தமிழனின் ஆதியும் சிவமே- சர்வமும் சிவமே..�தமிழும் சைவமும் நமது இரு கண்கள்..
தமிழ் எங்கள் மொழி……….சைவம் தமிழர்களின் வழி..
ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…
அன்பே சிவம்.