மிதமான உடற்பயிற்சியே ஆரோக்கியம்

மிதமான உடற்பயிற்சியே ஆரோக்கியம்

தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது வயிற்றுப் பகுதிக்கு அதிக பயிற்சி கொடுக்க வேண்டும். இது ஒரு தவறான கருத்து. நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு

அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம்.

ஆனால் நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.

வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது என்ற கருத்து நிலவுகிறது. இது தவறான கருத்து. எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை.

ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதுவும் ஒரு தவறான கருத்து. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது.

வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.