தற்போதைக்கு காணி , காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை – டக்ளஸ்

தற்போதைக்கு காணி , காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை – டக்ளஸ்

தற்போதைக்கு மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இரண்டு பிரதான இன சமூகங்களுக்கு இடையில் சரியான புரிந்துணர்வு எட்டப்படும் வரையில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலான தீர்மானத்தை சற்றே ஒத்தி வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர், இந்த அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் தமிழ் மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே புரிந்துணர்வு ஏற்படும் வரையில் அதிகாரங்கள் தொடர்பான தீர்மானத்தை ஒத்தி வைப்பது பொருத்தமானது என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், வடக்கில் மாகாணசபையை அமைப்பதானது தனது அரசியல் கனவு எனவும், தேர்தல்களை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறைகள், அரசியல் உரிமைகள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் தமிழ் மக்கள் நீண்டகாலமாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார். எனவே வட மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும், துரித கதியில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனினம், அரசியல் பிரச்சினைக்கு இன்னமும் காத்திரமான தீர்வுத் திட்டம் எதுவும் முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசியல் சாசனத்தை அமுல்படுத்துவதன் மூலம் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களை ஆரம்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சூரியனையும், சந்திரனையும் கோரவில்லை எனவும், நடைமுறையில் இருக்கும் அரசியல் சாசனத்தை அமுல்படுத்த வேண்டுமென கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்மிடம் ஒரு தடவை கோரிய போதிலும், தேர்தல் போட்டியிட வேண்டுமென தாம் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்; அமைச்சர் ஒருவரின் சேவையை இழக்க விரும்பாத காரணத்தினால் ஜனாதிபதி இவ்வாறு கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆளும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.