முதல் கூட்டு தலைமை தளபதி
இந்தியா இராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த 13 பேர் உயிரிழந்தனர்.08.12.2021
தமிழக குன்னூர் பகுதிக்கு வந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 14 பேரில், 13 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒருவர் தீ காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முப்படைகளின் கூட்டுத் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் (63 வயது) மற்றும் மனைவி உயிரிழந்திருப்பது மற்றும் ராணுவ வீரர்கள் இறந்திருப்பது அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முப்படை கூட்டுத்தலைமை தளபதியான பிபின் ராவத் இந்த ஆட்சியில் தான் முப்படைக்கும் முதல் கூட்டு தலைமை தளபதி என 2019ல் அறிவிக்கப்பட்ட பெருமைக்குரியவர். இதற்கு முன், முப்படைக்கும் கூட்டாக ஒரே தலைமை தளபதி என யாரும் இந்தப் பதவியை வகித்ததில்லை.
1978 இருந்து ராணுவத்தில் பணியில் இருக்கும் இவரின் சாதனை மிகப் பெரியது. கார்கில், சியாச்சின், லடாக் போன்ற மலைப் பகுதியில் நடந்த யுத்தத்தில் நிபுணத்துவம் பெற்றவர். பாலக்கோட் தாக்குதலில், இவர் செயலாற்றிய விதம், பலரின் பாராட்டுதலைப் பெற்றது. குறிப்பாக சீன ராணுவத்தின் ஊடுருவல்களளை எல்லையில் தடுத்து நிறுத்தியவர். ஜார்க்கண்ட் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர்.
சமீபத்தில் நடந்த இந்திய-சீன பிரச்சனையில், எல்லைக்கே சென்று ராணுவ வீரர்களுக்கு உற்சாகமூட்டியவர், மேலும், ஒரு அடி நிலத்தை எதிரிகள் அடைய மனதில் நினைத்தாலும், நம் ராணுவத்தால் விண்ணுலகுக்கு அனுப்பப்படுவார்கள் என வீர முழக்கமிட்டவர்.
ஒன்றுக்கு இரண்டு இன்ஜின் உள்ள, அதுவும் முப்படைக்கும் கூட்டு தளபதி செல்லும் ராணுவ ஹெலிகாப்டர், பலவித சோதனைகளுக்கு உட்பட்டு பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது, பலவித சந்தேகங்களை கிளப்பியுள்ளது, இந்த அசாதாரண சூழலில், black box கிடைத்து, கடைசியாக ஹெலிகாப்டர் ஓட்டிய விமானி என்ன செய்தார், பேசினார் என்று தெரிந்தால்தான், முழுமையாக என்ன பிரச்சினை என்பதை அறிய முடியும்.
யார் இந்த பிபின் ராவத்.
1958ல் உத்தரகாண்டில் பிறந்த இவர், தேசிய ராணுவ அகாடமி (NDA), இந்திய இராணுவ அகாடமியின் (IMA) முன்னாள் மாணவர். 1978 டிசம்பரில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். முதலில், தனது தந்தை பணிபுரிந்த 11 கோர்க்கா ரைபிள்ஸின் 5 வது பட்டாலியனில் பணியாற்றினார்.
வடக்கு மற்றும் கிழக்கு கட்டளை மற்றும் இந்தியாவின் மிகவும் கடினமான பிரதேசங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவரான இவர், ஜூனியர் கமாண்ட் விங், ராணுவ செயலாளர் கிளையில் மூத்த பயிற்றுவிப்பாளராகவும், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையிலும் பணியாற்றினார்.
இராவத், காங்கோ ஜனநாயகக் குடியரசில் பன்னாட்டுப் படையையும் தலைமை தாங்கியவர். இவரது செயல்களைப் பாராட்டி, பரம் விசிஷ்ட் சேவா (PVSM) பதக்கம், சிறந்த போர் சேவை பதக்கம் (YSM), உத்தம் யுத் சேவா பதக்கம் (UYSM), ராணுவ பதக்கம் போன்றவற்றை இந்திய அரசு இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறையில் பெரும் சீர்திருத்தங்களின் முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்படுகின்ற பிபின் ராவத்தை, முப்படைகளின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக இந்திய அரசு நியமித்தது..
இராவத், பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் நேரடியாக சவால்விட்டு துணிந்து நின்றவர். பாகிஸ்தானிடமிருந்து எவ்வித சவால்களை சந்திக்கவும் இந்திய இராணுவம் தயாராக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் சீனா தான் என்று கடந்த நவம்பர் 13 அன்று அதிரடியாக கூறினார். இக்கூற்றை சீன அரசு கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி இந்தியாவிலேயே ஐந்தாயிரம் கோடி மதிப்பிலான சுமார் ஆறு லட்சம் AK 203 ரைபிள்ளை தயாரிப்பதற்கான இந்திய – ரஷ்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முக்கிய காரணமாகவும் ராவத் இருந்தார்.
நம் அருகில் இருக்கும் இரு எதிரிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். கன்னுக்குத் தெரியாத விபத்தின் காரணமாக உயிரிழந்தார்.