மகாத்மா காந்தியின் கடைசி உடமைகள் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம்

மகாத்மா காந்தியின் கடைசி உடமைகள் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம்

மகாத்மா காந்தியின் கடைசி உயில், ஜெப மாலை, ரத்த மாதிரி, தேய்ந்த காலணி உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் இன்று ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில், காந்தி தனது கைப்பட எழுதிய உயில் 40 ஆயிரம் பவுண்டுகள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக 55 ஆயிரம் பவுண்டுகளுக்கு இந்த உயில் ஏலம் போனது.

பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட அவரது ரத்த மாதிரி 10 ஆயிரம் பவுண்டுகள் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றம் அளிக்கும் வகையில் 7 ஆயிரம் பவுண்டுகளுக்கே ஏலம் போனது.

காந்தியின் கைப்பட நூற்ற நூலில் இருந்து தயாரிக்கப்பட்ட சால்வை, 40 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இது எதிர்பார்த்த தொகையை விட இரு மடங்கு அதிகமாகும். அவரது தேய்ந்த காலணிகள் 19 ஆயிரம் பவுண்டுகளுக்கும், ஜெப மாலை 9 ஆயிரத்து 500 பவுண்டுகளுக்கும் ஏலம் போயின.

காந்தியின் கையொப்பமிட்ட புகைப்படம் எதிர்பார்த்ததை விட 4 மடங்கு அதிகமாக 40 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. அவர் வாசித்து வந்த ‘ராமாயணம்’ பிரதி 3 ஆயிரத்து 500 பவுண்டுகளுக்கும், அவர் பயன்படுத்திய குவளை மற்றும் ‘பிளாஸ்க்’ 16 ஆயிரத்து 400 பவுண்டுகளுக்கும், அவர் அணிந்த நைந்துப் போன ‘குல்லா’ 8 ஆயிரத்து 400 பவுண்டுகளுக்கும் ஏலம் போனது.

இன்றைய ஏலத்தில் காந்தியின் உடமைகளில் சில மொத்தத்தில் 3 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது.

ஒரு பிரிட்டிஷ் பவுண்ட் என்பது இந்திய மதிப்புக்கு ரூ.84 என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி இன்றைய ஏலத்தில் காந்தியின் உடமைகள் ரூ. 2 1/2 கோடிக்கு ஏலம் போயின

Leave a Reply

Your email address will not be published.