தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து கலந்துரையாடுவதற்கு நேற்றை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் தமிழர் விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்டப்பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பம்பலபிட்டியின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை காரியாலயத்தில் இந்த கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில், தமிழர் விடுதலை இயக்கத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான கட்சிகளுக்கிடையில் இடம்பெறும் முரண்பாடுகளை களைந்;து ஒற்றுமையுடன் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கான தீர்மானம் நேற்றைய சந்திப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழுள்ள ஏனைய கட்சிகளுக்கிடையில் நிலவும் முரண்பாடுகளை களைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து தமிழர் விடுதலை இயக்க உறுப்பினர்கள் கடந்த சில வாரங்களாக புளொட், தமிழர் விடுதலை கூட்டணி, ஈ.பி. ஆர். எல்.எப். ஆகிய கட்சிகளின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடினர். அதனடிப்படையில், தமிழரசு கட்சியுடன் நேற்று இரண்டாம் கட்டமாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
அந்த கலந்துரையாடலின் போது, 5 கட்சிகளும் இணைந்து கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கலந்துரையாடல் மிக விரைவில் இடம்பெறுமென்றும், இக்கலந்துரையாடல் மேற்கொள்வதற்கான திகதி மற்றும் நேரம் இடம் என்பவற்றினை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.