கடந்த சில மாதங்களில் மட்டும் இவ்வாறான நூற்றுக்கணக்கான வேண்டுகைகள் வெளிநாட்டுத் தூதரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
போராளிகளின் பிரச்சினைகளை மனிதாபிமான ரீதியாக அணுகக்கூடிய நாடுகள் என்று கருதப்படுபவைக்கே அதிகளவான வேண்டுகைகள் அனுப்பப்பட்டுள்ளன.
புனர்வாழ்வு முகாம்கள் என்று இலங்கை அரசு கூறும் தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்களே இவ்வாறு வெளிநாடு செல்வதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விடுவிக்கப்பட்ட பின்னரும் தாங்கள் கண்காணிக்கப்படுவதும் அடிக்கடி இராணுவ முகாம்களுக்கு அழைக்கப்படுவதும் படையினர் வந்து தம்மைப் பற்றித் தொடர்ச்சியாக தமது வீடுகளில் விசாரிப்பதும் தமது வாழ்க்கையை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளதால் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடவே தாம் அதிகம் விரும்புகின்றனர் என்று முன்னாள் போராளிகளில் பலர் “உதயன்’ பத்திரிகையிடம் தெரிவித்தார்கள்.
“தடுப்பில் இருக்கும்போது எமது தன்மானத்தை இழக்கும் வகையில் மிகக் கீழ்த்தரமான நிலையை எதிர்கொண்டிருந்தோம். விடுதலையின் பின்னர் நிலைமை மாறும் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால், எம்மால் எமது உறவினர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே எங்காவது சென்று விடாலம் என்று தோன்றுகின்றது” எனத் தெரிவித்தார் போராளி ஒருவர்.
வெளிநாடு ஒன்றுக்குச் செல்வதற்காக தான் வழங்கிய வேண்டுகையை ஏற்றுக் கொண்டு தூதரகம் ஒன்று தன்னை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்திருந்ததாகவும் அன்றைய தினத்தில் தன்னைப் போன்ற மேலும் 50 முன்னாள் போராளிகளும் அதே தூதரகத்தில் நேர்முகப் பரீட்சைக்காகச் சென்றனர் என்பதைத் தான் தெரிந்து வைத்திருக்கிறார் என்றும் பெண் போராளி ஒருவர் “உதயன்’ பத்திரிகையிடம் தெரிவித்தார்.