இலங்கையின் மிக மோசமான மனித உரிமை மீறல் காரணமாக, நவம்பர் மாதம் இடம்பெறும் பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் கனடா கலந்துகொள்ளமாட்டாது என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் அடித்துக் கூறிவிட்டார்.
கனடாவின் இந்த நடவடிக்கையை முன்மாதிரியாகக் கொண்டு பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளும் மாநாட்டைப் புறக்கணிக்குமா என்பது தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
இலங்கையில் மிக நீண்ட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் 2009 ஆம் ஆண்டு முடிவுற்றது. அதன் பின்னர் இலங்கையின் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் பதிவாகி உள்ளன.
நீதிபதிகள் அச்சுறுத்தப்படுதல், ஊடாகவியலாளர்கள் தாக்கப்படுதல், நாட்டை விட்டு தப்பி ஓடுதல் என்பனவும் இலங்கையில் அதிகரித்துச் செல்கின்றன. தென்னாசியாவுக்கு வெளியே மிகப் பெரிய தமிழ் சமூகத்தைக் கொண்ட நாடாகக் கனடா காணப்படுகின்றது.
தமிழ் மக்கள் சார்பான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவும், இலங்கையின் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான அதிருப்தியை வெளிக்காட்டவுமே இந்த நடவடிக்கையை எடுத்ததாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.