Search

மாகாணசபை அதிகாரங்களும் மகாநாயக்க தேரரின் விளக்கங்களும்!- இதயச்சந்திரன்

நாடாளுமன்றைத்தைவிட நாலாவது மாடிக்கே, தமிழ் அரசியல்வாதிகள் அடிக்கடி செல்கின்றார்கள். இதில் அதிக தடவைகள் நாலாவது மாடிக்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி யார் என்று கேட்டால், அது நிற்சயமாக யாழ் மாவட்ட எம்.பி. சிறிதரன் என்று சிறுவர்களும் கூறுவார்கள்.

இப்போது விசாரணை என்பது பரிணாமமடைந்து, கைதுகளாக வளர்ச்சி பெற்று விட்டன.

மே 18 ஆம் திகதி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் உட்பட பலர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் கஜேந்திரன் மீதான விசாரணைகளை, பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்னமும் கைவிடவில்லை.

நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாகப் பங்குகொள்ளும் தமிழ் தேசிய அரசியல் முன்னெடுப்பாளர்களை நோக்கியே இவ்வாறான கைதுகளும், விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதைக் காணலாம்.

இவர்களால் ஒழுங்குபடுத்தப்படும் மக்கள் போராட்டங்களைத் திசைதிருப்புவதற்கும், வழக்குகளிலும் விசாரணைகளிலும் இவர்களை முடக்குவதற்கும், இத்தகைய அழுத்தங்களை புலனாய்வுப் பிரிவுகள் ஊடாக அரசு முன்னெடுப்பதாக சொல்லப்படுகிறது.

இவைதவிர, மக்களின் தகவல் அறியும் உரிமையின் அடையாளமாக இருக்கும் ஊடகங்கள், நில அபகரிப்பு குறித்தான செய்திகளை வெளியிட்டால், அவற்றினை ஊடகப் பிச்சைக்காரர்களின் பிதற்றல் என்று படைத்தரப்பு கருத்துச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

வடக்கிற்கு விஜயம் செய்யும் ஐ.நா. உயர் அதிகாரிகளுக்கும், கட்டளைத் தளபதிகளே காணி பறிப்பு குறித்தான விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கிறார்கள்.

வடக்கில் தமது சொந்தக் காணிகளை இழந்த 1474 பேர் அரசிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இதன் மீதான விசாரணைகளை, மே 27 வரை முறையீட்டு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வடக்கு கிழக்கு நிர்வாக ரீதியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பி போட்ட வழக்கின் தீர்ப்பு விரைவாக வெளிவந்தது போல், காணித் தீர்ப்பு வரப்போவதில்லை. தனியார் நில உரிமைக்கும் இறைமைக்கும் இடையே பெரும் சாசனப் போராடமே நடைபெறப்போகிறது.

நாட்டின் தேசியப் பாதுகாப்பு என்கிற விவகாரம், மக்கள் இறைமையை மறுதலித்துவிடும். வரும் செய்திகளைப் பார்த்தால், அதிதீவிர பௌத்த சிங்கள பேரினவாத சக்திகள் இகாணி உரிமை தமிழர்கள் வசம் சென்றுவிடக் கூடாதென்பதில் மிகத் தெளிவாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.

இவைதவிர, கைதுகளுக்கு அப்பால் சிங்கள கடும்போக்குச் சங்கங்களான சேனாக்களும், உறுமயக்களும் காணி உரிமை வழங்கக்கூடாதென போர்க்கொடி உயர்த்துகின்றன.

13 வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யாமல் இவடக்கில் தங்கியிருந்த சிங்கள மக்களை மீளக் குடியமர்த்தாமல், வட மாகாணசபைத் தேர்தலை நடாத்த இடமளிக்கப் போவதில்லை என்பதோடு நாட்டை நேசிக்கும் அணியினர் ஒன்றுபட வேண்டும் என்கிறார் பொதுபல சேனாவின் செயலாளர் கலபோட்ட அத்தே ஞானசார தேரர்.

சிங்கள இறைமையைக் காப்பாற்ற எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் இந்தத் தேரர்கள் என்பது அதிசயமல்ல. தேர்தல் நடக்கவிருப்பதாக அறிவித்த பின்னர் இப்படிப் பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

அதேவேளை, இந்த விவகாரம் குறித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கூறும்போது, அரசியலமைப்பிலுள்ள எந்தெந்த சரத்துக்கள் நீக்கப்பட வேண்டுமென விளக்கமாக முன்வைக்கின்றார்.

அதாவது அரசியல் யாப்பிலுள்ள 154 ஏ (3), 154 ஏ (2), 154 ஜி (3) என்பதோடு மாகாணசபை பட்டியலின் 4.2 உறுப்புரை ஆகியன திருத்தியமைக்கப்பட்டு, மாகாணசபைக்குரிய 6 அதிகாரங்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்கிறார்.

ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இது குறித்து நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றினைக் கொண்டுவரப் போவதாகக் கூறுவதோடு, அதிகாரங்கள் நாடாளுமன்ற முறைமைக்குள் குவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

பொதுவான பார்வையில், சிங்கள உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடாளுமன்றில் குவிந்திருக்கும் அதிகாரங்கள், வட – கிழக்கிற்கு பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதாக பலரும் நம்புகின்றார்கள்.

இந்திய- இலங்கை ஒப்பந்தம் மூலம் இந்த மாகாண சபை முறைமை புகுத்தப்பட்டதால், அதனை எதிர்ப்பது இந்தியாவின் ஆதரவினை இழக்க வேண்டிவரும் என்று ஒரு தரப்பும், அரசிடமிருந்து இதைவிட வேறெதையும் பெறமுடியாது ஆகவே கிடைப்பதைப் பெற்று அடிபணிந்து வாழ்வோம் என்று பிறிதொரு சாராரும் தமக்குரிய விளக்கங்களை அளிக்கின்றார்கள்.

ஆனால். 13வது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும், மாற்ற வேண்டும், அல்லது ஒழிக்க முடியாது என்கிற பல மாறுபட்ட கருத்துக்கள் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் விவாதிக்கப்படும் போது, இதுபற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்கிறார் வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரீஸ்.

இவைதவிர, வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடந்தால் நாடு பிளவுபடும் என்பவர்களுக்கு, மல்வத்த மகாநாயக்க தேரர் அருமையான, யதார்த்தமான உண்மை ஒன்றினை புலப்படுத்தியுள்ள விவகாரத்தை குறிப்பிட்டாக வேண்டும். அவர், தன்னைச் சந்தித்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவிற்கு கொடுத்த விளக்கம், 13வது திருத்தச் சட்டம் அற்புதமானது என்பவர்களுக்கு சில வெளிச்சங்களை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

‘சனாதிபதியின் வசம் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் இருக்கும் போது, வட மாகாண சபைத் தேர்தல் குறித்து அஞ்சத்தேவையில்லை. அதுமட்டுமல்லாது, காணி, காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரங்கள் அதிபரிடம் இருப்பதால், 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று இப்போது பேச வேண்டாம்’. இதுதான் மல்வத்த மகாநாயக்க தேரர், தினேஷ் குணவர்த்தனாவிற்கு அருளிய உபதேசம்.

ஆனாலும் மாகாண நிதியத்தின் கட்டுப்பாடு என்பது சனாதிபதி, மற்றும் அவரால் நியமிக்கப்படும் ஆளுநர், அத்தோடு நாடாளுமன்றத்திடம் மட்டுமே கூட்டாக இருக்கும் என்பதை சொல்ல மறந்து விட்டார் மகாநாயக்க தேரர்.

இந்த 13 வது திருத்தச் சட்டம் குறித்து, அதிகமாக அக்கறை கொள்ளும் சிங்கள கடும்போக்காளர்களுக்கு, மனோ கணேசன் கொடுக்கும் விளக்கமும் பொருத்தமாகத்தானிருக்கிறது. அதாவது ‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரையும், பலமிக்க நாடாளுமன்றத்தையும், முப்படைகளையும் வைத்திருக்கும் உங்களுக்கு அச்சம் இருந்தால், தமிழர்களுக்கு எவ்வளவு அச்சம் இருக்கும்’ என்று மனோ சொல்வது, அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவிற்கு தேரர் கொடுத்த விளக்கத்திற்கு தமிழர் தரப்பு நிலைப்பாட்டை முன்வைத்தது போலிருந்தது.

13 வது திருத்தச் சட்டம் குறித்த மோதல்கள், நிராகரிப்புகள், ஊடகப் பரப்பெங்கும் ஆழமாகப் பரவியுள்ள நிலையில், அரச காணிகளையும், பறிக்கப்படும் தனியார் நிலங்களையும் பன்னாட்டு கம்பனிகளுக்கு தாரை வார்க்கும் நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன.

இவ்வருட முதல் காலாண்டில் 218 மில்லியன் டொலர்களாக இருக்கும் வெளிநாட்டு நேரடி முதலீடு குறைவாக இருப்பதால், வருட இறுதிக்குள் 2 பில்லியனை எட்ட முடியாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் அரசு திணறுவதைக் காணலாம். 2004 இல் அறிமுகப்படுத்தப்பட்ட, வெளிநாட்டவரால் வாங்கப்படும் சொத்துக்களுக்கான 100 வீத வரியை மாற்றியமைக்கும் வகையில் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர அரசு திட்டமிடுகிறது.

பாரிய முதலீட்டாளர்கள் மந்திரிசபையின் அனுமதியுடன் காணிகளை வாங்கி, அதற்கு 5-10 சதவீத காணிவரியை செலுத்துவதோடு, அதனை குத்தகைக்கு விடும் உரிமையைப் பெறுகிறார்கள். வெளிநாட்டு அமைச்சு இதற்கான சுற்று நிரூபம் ஒன்றினை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, 10 மில்லியன் டொலர்களுக்கு மேல் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கே இச் சலுகை வழங்கப்படும் என்று தெரியவருகிறது.

ஆகவே நில ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் கைதுகளின் பின்புலம் இப்போது தெளிவாக புலப்படுகிறது. அத்தோடு, காணிகளைக் கையாளும் உரிமை ஏன் மாகாண சபைகளுக்கு சிறிதளவேனும் இருக்கக்கூடாதென்பதன் அர்த்தமும் புரிகிறது.
Leave a Reply

Your email address will not be published.