தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் பெங்களூர் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையை அடுத்தே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குண்டுகளை தயாரிப்பதற்கான வெடிப்பொருட்களை வைத்திருந்தார்கள் என்றே இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்த குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை.
இந்த சந்தேகநபர்கள் 10 பேரும் 2002ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் இவர்கள் உச்சநீதிமன்றம் மற்றும் கர்நாடக மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் இந்த குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்து விட்டனர் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.