புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வைத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளை வானில் நேற்று முன்தினம் இரவு கடத்தப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாரான சிவராசா சிவகரன் (வயது 25) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர் குறித்து இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என அவரது மனைவி தெரிவித்தார்.
கிளிநொச்சியில் உள்ள அரச சார்பு அமைப்பு ஒன்றின் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவரே தனது கணவரைக் கடத்தியதாக நேரில் கண்டவர்கள் தன்னிடம் கூறினர் என்றும் மனைவி மேலும் கூறினார்.
குறித்த நபர் கடத்தப்பட்டவரின் உறவினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுபவரை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸார் கூறியுள்ள போதும் அவர் இதுவரை அங்கு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.