13ஆவது திருத்தத்தில் திருத்தம் செய்வதாயின் இந்தியாவிடம் ஆலோசனை பெறுவோம் – அரசாங்கம்!

13ஆவது திருத்தத்தில் திருத்தம் செய்வதாயின் இந்தியாவிடம் ஆலோசனை பெறுவோம் – அரசாங்கம்!

இலங்கையில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவருதாயின் இந்தியாவின் ஆலோசனைகள் நிச்சயம் பெற்றுக்கொள்ளப்படும். ஆனால், 13ஆவது திருத்தச்சட்டம் என்பது இலங்கை அரசியலமைப்பின் ஒரு பகுதியென்பதால் அதனை நிராகரிக்க முடியாது என்று ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.வடமாகாண சபை தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும். உறுதியான திகதியை விரைவில் அரசாங்கம் அறிவிக்கும். அதேபோன்று வட மாகாண சபை தேர்தல் மற்றும் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டில் மேலோங்கியுள்ள கருத்துகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொடர்ந்தும் கூறுகையில்;,

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு எதிர்ப்புக் கருத்துகள் தெரிவிக்கப்படுவதுடன் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை அரசாங்கம் அவதானத்துடனேயே நோக்குகின்றது. எவ்வாறாயினும் நாட்டின் மூலச் சட்டத்தின் பிரகாரம் 13ஆவது திருத்தச் சட்டம் என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதி. இதனை நிராகரிக்கவோ, புறந்தள்ளவோ முடியாது. ஆனால், 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் தீர்மானங்களை மேற்கொண்டால் அதற்கு இந்தியாவின் ஆலோசனையை பெற்றுக் கொள்வோம்.

ஆனால், தற்போதைக்கு அவ்வாறானதொரு தேவை ஏற்பட வில்லை. அதேபோன்று வட மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறும். அரசாங்கத்திற்குள் உள்ள பல அரசியல் கட்சிகளும் வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யவேண்டுமென்றெல்லாம் கருத்துகளை வெளியிடுகின்றன. ஆனால், அரசாங்கம் உடனடியாக அவ்வாறானதொரு நிலைப்பாட்டிற்கு செல்ல முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.