யாழில் இந்திய நாடாளுமன்றக் குழுவினர்!- சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு பதில் அளிக்கமுடியாது திணறினர்

யாழில் இந்திய நாடாளுமன்றக் குழுவினர்!- சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு பதில் அளிக்கமுடியாது திணறினர்
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு வருகைதந்த இந்திய தூதுக்குழுவினர், சிவில் சமூகத்தினரைச் சந்தித்து மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டனர்.

இச்சந்திப்பு யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நடைபெற்றது.

சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தலைவர்கள் உட்பட பலர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதில் இந்திய ராஜ்யசபாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதித் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினர் யாழ்.குடாநாட்டிற்கு வருகைதந்து மக்களின் அபிப்பிராயங்கள், வடகடல் நிறுவனம், இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இந்திய வீட்டுத்திட்டம் ஆகியவற்றைப் பார்வையிட்டுள்ளனர்.

இச்சந்திப்பின்போது சிவில் சமூகத்தினரால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சிறிலங்காவின் ஆயுதக் கலாசாரத்திற்கு இந்திய அரசாங்கமே வழிவகுத்ததென்ற கருத்தை சிவில் சமூகப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை இந்திய அரசாங்கத்தின் ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட 13 ஆவது சரத்தை நீக்குவது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தென்பகுதியில் முன்வைக்கப்படுகின்றன.

13வது சரத்தில் கூறப்பட்ட விடயங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டுவராது என தமிழ் மக்கள் உணர்கின்ற நிலையில் 13வது சரத்தை நீக்காமல் பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக இந்து ஆலயங்களில் நடைபெற்றுவருகின்ற ஆலய உடைப்பு, விக்கிரகங்கள் களவாடுதல் போன்ற சம்பவங்கள் அண்மைக் காலமாக காணப்படுகின்றது என்றும் இதனால் இந்துக்கள் கவலையடைந்துள்ளனர் என்ற விடயமும் அபிப்பிராயமாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்திய இழுவைப் படகுகள் வடமாகாண கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தலை கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக பல முறை கோரிக்கை விடப்பட்டும் எதுவித ஆரோக்கியமான நடவடிக்கையும் இதுவரை நடைபெறவில்லை என்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

கடந்தகாலப் போரின் காரணமாக வடமாகாணத்தில் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டுள்ளதென்றும், குறிப்பாக பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை, காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலைகள் போரின் பின்னர் செயலிழந்துள்ளதென்றும், இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் சிவில் சமூகத்தினரால் இந்தியக் குழுவினரிடம் முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் தற்போது இராணுவத்தினர் பொதுமக்களுடன் சமூகமான நல்லுறவை பேணி வருகின்றனர் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. மேலும் அரச பயன்பாட்டிற்கென அரசாங்கத்தல் சுவீகரிக்கப்படும் பொது மக்களின் காணிகள் தொடர்பாகவும் கருத்து முன்வைக்கப்பட்டது.

மழைகாலத்திற்கு முன்னர் இரண்டாம் கட்ட வீட்டுத் திட்டப்பணிகளை ஆரம்பியுங்கள் இந்திய எம்.பிக்கள் குழுவிடம் மக்கள் கோரிக்கை

மழைகாலம் வருவதற்கு முன்னர் இந்திய வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து, வீடுகளை அமைத்தாருங்கள் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் யாழ்.அரியாலை கிழக்கு நாவலடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்று பிற்பகல் அரியாலை கிழக்கு நாவலடியில் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் அமைத்துக் கொடுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களைப் பார்வையிட்டனர்.

இந்நிலையில் இந்திய அரசினால் எமது மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்காக இந்திய அரசாங்கத்திற்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இடம்பெயர்ந்த மக்கள் வீடுகள் இல்லாத நிலையில் மிகவும் கஸ்ரப்படுகின்றனர். எனவே இந்திய வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பித்து மழை காலத்திற்கு முன்னர் மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.