13இல் திருத்தம் மேற்கொள்ள கூட்டமைப்பே காரணம் என்கிறார் கெஹலிய!

13இல் திருத்தம் மேற்கொள்ள கூட்டமைப்பே காரணம் என்கிறார் கெஹலிய!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வராததால் தான், அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக அரசு அமைச்சரவையில் யோசனைகளை முன்வைத்துள்ளது.
இதன்படி, இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக, சிறிலங்கா அதிபருக்கு உள்ள அதிகாரம் நீக்கப்படவுள்ளது.
அடுத்து, தேசிய கொள்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை சமர்பிக்க முன்னர், எல்லா மாகாணசபைகளினதும் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற சட்டப்பிரிவைத் திருத்தி, பெரும்பான்மை மாகாணசபைகளின் அனுமதியைப் பெற்றால் போதும் என்று மாற்றம் செய்யப்படவுள்ளது.
மாகாணசபைகளின் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்குவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவில்லை.
இந்த அதிகாரங்களை நீக்குவது தொடர்பாக, கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்த யோசனைகள் குறித்த கட்சிகளின் கருத்துகள் குறித்து அடுத்த வார கூட்டத்தில் ஆராயப்படும்.
சகல கட்சிகளினதும் கருத்துக்களை ஆராய்ந்த பின்னரே 13வது திருத்தத்தில் மாற்றம் செய்யப்படும். அத்துடன் இந்தத் திருத்தங்கள் குறித்து மாகாணசபைகளினது கருத்துகளும் பெறப்படும்.
சிறிலங்காவில் உள்ள 8 மாகாணசபைகள் இணைந்தால் அது தனி நாடாகி விடும். ஒரே நாட்டினுள் மாகாணசபைகள் இணைய வேண்டிய தேவை கிடையாது.
அதனாலே குறித்த பிரிவை நீக்கும் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய கொள்கை தொடர்பான சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் மாகாணசபைகளின் பெரும்பான்மை அனுமதி இருந்தால் போதும் என்று திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்றலாம்.
மாகாண சபைகளின் பெரும்பான்மை அனுமதி கிடைக்காவிட்டால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்று திருத்தம் செய்யப்படவுள்ளது.
இந்த இரு திருத்தங்கள் குறித்தும் கூட்டணிக் கட்சிகளின் யோசனைகளை முன்வைக்க ஒருவார காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
13வது திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமித்தது.
இதில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், ஒரு ஆண்டுக்கு மேலாகியும் தெரிவுக்குழுவினால் செயற்பட முடியவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராத நிலையிலேயே, அரசாங்கம் இந்த திருத்தங்களை முன்வைத்துள்ளது.
வடமாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்காக 13வது அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படவில்லை.
எனினும், வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில், திருத்தம் செய்யப்படும்.
திட்டமிட்டபடி வரும் செப்டெம்பர் மாதம் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்படும். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.