13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது என பிரைடே போரம் அமைப்பு கோரியுள்ளது. எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் இந்த முயற்சியை முறியடிக்க முனைப்பு காட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நியாயமானதும் சுதந்திரமானதுமான முறையில் வடக்கில் தேர்தல்களை நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக அரசாங்கம் பல தடவைகள் வாக்குறுதி அளித்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது,
உத்தேச அரசியல் சாசனத் திருத்தத்தின் ஊடாக மத்திய அரசாங்கம் மாகாணசபை அதிகாரங்களை வலுவிழக்கச் செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் நோக்கங்களை முதனிலைப்படுத்திய சட்டத் திருத்தங்களை அவசர அவசரமாக நிறைவேற்றுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பிரைடே போரம் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் இராஜதந்திரி ஜயந்த தனபால, பேராயர் துலிப் சிக்கேரா, பேராசிரியர்கள் உள்ளி;ட்ட பல்வேறு புத்திஜீவிகள் இந்த அமைப்பில் அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.