விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தும்படி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன், அண்டைநாடான இந்தியாவும் கூட அழுத்தம் கொடுத்ததாக, ஜனாதிபதி செயலர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
“பல்வேறு தடைகளை எதிர்கொண்ட போதிலும், ஜனாதிபதி தீவிரவாதத்தை அடியோடு அழிப்பதில் உறுதியாக இருந்தார்.
போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்த நாடுகளுக்கு, தனக்கு தீவிரவாதத்தை அழிப்பதற்கு பெரும்பான்மையான மக்கள் தனக்கு தெளிவான ஆணையை வழங்கியிருப்பதாகவும், அதனை நிறைவேற்றுவது தனது கடமை என்றும் அவர் பதிலளித்தார்.
நாட்டு மக்களின் விருப்பமோ அல்லது பொதுக்கருத்து வாக்கெடுப்போ இன்றியே அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் மூலம் நாட்டின் நிர்வாக முறைமை முழுமையாக மாற்றப்பட்டது.
வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு, இந்தியத் தூதுவராக இருந்த டிக்சிற், அப்போதைய ஜனாதிபதியை கோரியிருந்தார்.
நாட்டை இழப்பதா அல்லது 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதா என்ற தெரிவை மேற்கொள்ள வேண்டிய வகையில் அந்த அழுத்தம் அமைந்திருந்தது.
மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது தொடர்பாகவும், 13வது திருத்தம் கொண்டு வரப்பட்டது தொடர்பாகவும், அன்று சிலர்வசம் இருந்த இரகசியங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வருகின்றன.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.