நைல் நதியின் குறுக்கே அணை: ஆப்ரிக்காவில் போர் பதற்றம் (வீடியோ இணைப்பு)

நைல் நதியின் குறுக்கே அணை: ஆப்ரிக்காவில் போர் பதற்றம் (வீடியோ இணைப்பு)

நைல் நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கான முயற்சியில் எத்தியோபியா அரசு ஈடுபட்டுள்ளது ஆப்ரிக்காவில் போர் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிக நீளமான நதி என்ற பெருமை படைத்தது நைல் நதி.

வடகிழக்கு ஆப்ரிக்காவில் தொடங்கி, மொத்தம் 6650 கிலோ மீற்றர் நீளமுடையது. வழியில் 11 நாடுகளை கடந்து வரும் நைல் நதி கடைசியில் மத்தியதரைக்கடலில் கலக்கிறது

நைல் நதியை மட்டுமே நம்பி தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோபியா, எரிட்ரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய 11 நாடுகள் உள்ளன.

இதற்காக நைல் நதிக்கு சர்வதேச நதி என்ற பெயரும் உள்ளது. குடிநீர், நீர்ப்பாசனத்துக்கு இந்த நதிநீர்தான் 11 நாடுகளுக்கும் ஆதாரம்.

நைல் நதிக்கு வெள்ளை நைல், நீல நைல் என்ற 2 துணை நதிகள் உள்ளன. வடகிழக்கு ஆப்ரிக்காவில் தொடங்கி இரண்டாக பிரியும் நைல் நதியில், துணை நதியான வெள்ளை நைல்தான் மிக நீளமானது.

இந்த துணை நதி ருவாண்டா, புரூண்டி, தான்சானியா, உகாண்டா, தெற்கு சூடான் வழியாக பாய்கிறது. நீல நைல் நதி எத்தியோபியாவில் தொடங்கி சூடான், எகிப்து வழியாக செல்கிறது.

வெள்ளை மற்றும் நீல துணை நைல் நதிகள் சூடான் தலைநகர் கார்ட்டூம் அருகே ஒன்றாக சேர்ந்து ஒரே நதியாக சூடானுக்குள் நுழைகிறது. பின்னர் எகிப்து வழியாக கடலில் கலக்கிறது.

கற்காலத்தில் எகிப்தில் நைல் நதிக் கரையோரம் மக்கள் வாழ்ந்துள்ளனர். எகிப்தின் கலாசாரம், வாழ்க்கையோடு கலந்து விட்டது நைல் நதி.

இந்நிலையில், நீல நைல் நதிக்கு குறுக்கே அணை கட்டும் பணியை எத்தியோபியா தொடங்கி விட்டது. இதற்கு எகிப்து அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எத்தியோபியா அணை கட்டிவிட்டால் நைல் நதிநீர் எகிப்துக்கு கிடைக்காமல் போய் விடும் அல்லது நீர்வரத்து குறையும்.

“நைல் இல்லாவிட்டால், எகிப்து இல்லை” இதுதான் பெரும் பிரச்னை. எகிப்தில் 8.4 கோடி மக்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படும். பெரும்பாலான நீர்ப்பாசன பகுதிகள் வறண்டு விடும். தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என பல அபாயங்கள் இருக்கின்றன.

நைல் நதி நீர் எங்கள் வாழ்வாதார உரிமை. அதில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட விட்டுதர முடியாது. அணை கட்டுவதை எத்தியோபிய அரசு உடனே நிறுத்த வேண்டும்.

இதுகுறித்து சர்வதேச நதிநீர் ஆணையத்தில் மேல் முறையீடு செய்வோம். எத்தியோபிய அரசு அணை கட்டுவதை நிறுத்தாவிட்டால் ராணுவ நடவடிக்கையை தவிர வேறு வழியில்லை என்று எகிப்து வெளிவிவகாரத்துறை அமைச்சர் முகமத் கமேல் அமர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஆனால், நைல் நதியின் குறுக்கே அணை கட்டி 6,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் எத்தியோபிய அரசு உறுதியாக உள்ளது. அணை கட்டும் பணிகளையும் தொடங்கி விட்டது.

அணை கட்டினால் எகிப்து பாதிக்காது. நதியில் இருந்து கிடைக்கும் தண்ணீரின் அளவும் குறையாது என்று விளக்கம் சொல்கிறது எத்தியோபியா.

மேலும், இதுசம்பந்தமாக எகிப்து தூதரை அழைத்தும் எத்தியோபிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அணை கட்டினால் போர் தொடுப்போம். அணையை தகர்ப்போம் என்ற ரீதியில் எகிப்து அமைச்சர்கள் பேசியது குறித்து விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

நைல் நதி அணை விவகாரம் ஆப்ரிக்க நாடுகள் இடையே ராணுவ மோதல் உருவாகும் சூழலையும், போர் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.