மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பரப்புரை செய்த அனைத்து இடங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மும்பை மாநகராட்சிக்கு கடந்த 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

இத்தேர்தலில் தமிழர் பகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க கடந்த 13ஆம் தேதி செந்தமிழன் சீமான் பரப்புரை செய்தார். தமிழர்கள் அதிகம் வாழும் தாராவியிலும், சயான் கோல்லிவாடாவிலும் சீமான் பேசினார். அப்போது ஈழத்தில் தமிழினத்தை அழித்தொழிக்க சிங்கள பெளத்த இனவாத அரசுக்குத் துணைபோன காங்கிரஸ் அரசுக்கு பாடம் புகட்ட தமிழர்கள் அனைவரும் காங்கிரஸை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை ஒரு முறை கூட கண்டிக்காத காங்கிரஸ் கட்சி தமிழனுக்குத் தேவையா என்றும் சீமான் வினா எழுப்பினார். சீமானின் பிரச்சாரம் மும்பை வாழ் தமிழர்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளது.

தாராவியில் முஸ்லீம்கள் அதிகம் வாக்காளர்களாக உள்ள ஒரு வார்டைத் தவிர மற்ற 6 வார்டுகளிலும் காங்கிரஸ் தோற்கடிக்கபட்டுவிட்டது. இந்தத் தொகுதிகளில் சிவசேனா கூட்டணி வேட்பாளர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல், சயான் கோல்லிவாடாவில் சீமான் ஆதரித்துப் பரப்புரை செய்த, 168 வட்டத்தில் போட்டியிட்ட தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இந்த வார்டில் காங்கிரஸ் தோற்பது இதுவே முதல் முறையாகும். சீமானின் பரப்புரை ஏற்படுத்திய எழுச்சி காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை காணா வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென அங்குள்ள தமிழர்கள் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *