தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
காபூலில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளைக் கட்டுப்படுத்த சமாதானப் பேச்சுவார்த்தைகளே சிறந்த வழி என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவும், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயும் இணங்கியுள்ளனர். வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் மக்களை கொலை செய்து கொண்டு கட்டாரில் சமாதான அலுவலகமொன்றை தலிபான்கள் அமைப்பதில் பயனில்லை என கர்ஸாய் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மக்களின் எதிரிகள் சமாதானத்தை விரும்பவில்லை என்பது ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் இடம்பெற்ற தாக்குதலின் மூலம் மீள அம்பலமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், சமாதானப் பேச்சுவார்த்தைகளை தொடர்வது என அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானும் அறிவித்துள்ளது. இது தொடர்பில் தலிபான்கள் எவ்வித கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.