புலிகளின் முன்நாள் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவி தமிழினி விடுதலை செய்யப்பட்டார்:-

புலிகளின் முன்நாள் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவி தமிழினி விடுதலை செய்யப்பட்டார்:-

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி இன்று காலை பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் தங்கபுரத்தை சேர்ந்த தமிழினி இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின் 2009ம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதனையடுத்து, கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் திகதி தமிழினிக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் ஆரம்பமானது. இந்நிலையில், புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழினி, அவரது தாயாரான சிவசுப்ரமணியம் சின்னம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் தமிழினி இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழினி வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்த தகவல்களை உறுதி செய்ய முடியவில்லை. இதுதொடர்பாக அவரும் எவ்விதக் கருத்துக்களும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.