“அரசின் கொள்கைகளையும், தீர்மானங்களையும் ஏற்றுக்கொண்டு அரசில் இருப்பவர்கள் இருக்கலாம். அதில் முரண்பாடு இருப்பவர்கள் உள்ளிருந்து சதிவேலைகளைச் செய்யாமல் விரும்பிய நேரத்தில் வெளியேறலாம். அதற்கு எதுவித தடைகளும் கிடையாது.” இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஆளுங்கட்சிக் கூட்டத்தின்போதே அவர் இதனை வலியுறுத்தி உள்ளார். மேலும், மூன்றிலிரண்டு பெரும்பான்மைப்பலம் நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக நாட்டுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு எவரின் உதவியையும் நாடி, அதில் தங்கியிருக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
”13′ ஆவது திருத்தம் தொடர்பிலும், அதன் முக்கியமான அதிகாரங்களின் நீக்கம் குறித்தும் மாகாணசபைகளில் அரசுக்கு ஆதரவாகப் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஆளுங்கட்சியின் பங்காளிகள் மாகாணசபைகளில் அதனை ஆதரிக்கத் தயங்குவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கூட்டத்தில் கடும் விசனத்தைத் தெரிவித்துள்ளார்.
”அரசு எடுக்கும் தீர்மானத்துக்கு ஆதரவைத் தெரிவித்துவிட்டுப் பின்னர் வெளியில் சென்று அரசுக்கு எதிராகப் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசுக்குள் இருந்துகொண்டே அரசுக்குக் குழிபறித்த பலவான்களை நான் வெளியேற்றியிருக்கிறேன். எனவே, உள்ளிருந்து சதி வேலைகளில் ஈடுபடும் எவரையும் நான் மன்னிக்கமாட்டேன். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பின்னிற்கப் போவதில்லை” என்ற சாரப்பட ஜனாதிபதி இங்கு தெரிவித்துள்ளார்.
—