தமிழீழ உதைபந்தாட்டக் கழகம் (TEFA) எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள டின்வோல்ட் ஹில் (Tynwald Hill) சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுகின்றது.
சென். ஜோன்ஸ், ஐல் ஒஃப் மான் (St.John’s, Isle of Man) எனும் இடத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்துடன் Sealand F.A., Alderney F.A., Raetia F.A., Occitania F.A. and St. John’s United F.A. ஆகியவை போட்டியிடுகின்றன.
இவ்வாறான சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினை உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் உதைபந்தாட்ட வீரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து, அதனூடாக தமிழீழத்தின் தனித்துவத்தைப் பேணுவதுடன் அவர்களின் திறமையினை ஊக்குவிக்கும் பொருட்டும் உலகளாவிய தமிழ் இளையோர் அவை (T-League) 2012ம் ஆண்டில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்தை உருவாக்கியது.
தமிழீழ உதைபந்தாட்டக் கழகமானது உலகெங்கும் பரந்து வாழும் ஆர்வமுள்ள தமிழ் இளையோர்களால் தமிழீழத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. இது, சுவிஸ்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய இராட்சியம், நோர்வே, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளில் வாழும் எமது வீரர்களில் பிரதிபலிப்பதைக் காணலாம்.
தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரவீன் நாகேந்திரம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்
“இனப்படுகொலைக்கு தமிழீழத்தில் முகங்கொடுத்துவரும் எமது சகோதரர்களின் நிலைபற்றி அறிவோம். அவர்களும் தமிழீழத்தின் சார்பில் இப்போட்டிகளில் பங்குபற்றும் ஒரு நாள் நிச்சயம் உருவாகும். அதுவே எமது எதிர்பார்ப்பு” எனக் கூறினார்.