Search

மேரி கொல்வின் அம்மையார் சிரியா படைகளால் படுகொலை!

உலகத் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையார் சிரியப் படைகளின் எறிகணை வீச்சில் பலியாகியுள்ளார்.

பிரித்தானிய சண்டே ரைமஸ் வார இதழின் பத்தி எழுத்தாளரும், செய்தியாளருமான மேரி கொல்வின் அம்மையார், சிரிய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸ் நகரில் தங்கியிருந்த பொழுது அவரது வீட்டின் மீது அரச படைகளின் பத்துக்கும் அதிகமான எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

இதன்பொழுது அதே வீட்டில் தங்கியிருந்த பிறிதொரு ஊடகவியலாளரான பிரெஞ்சு நிழற்படவியலாளர் ரெமி ஒச்லிக் அவர்களும் பலியாகியுள்ளார்.

யுத்த களமுனைகளுக்கு துணிச்சலுடன் பயணம் செய்து வெளியுலகிற்கு செய்திகளை வெளிக்கொணர்ந்து வந்த மேரி கொல்வின் அம்மையார், 2001ஆம் ஆண்டின் முற்பகுதியில் வன்னிக்கு இரகசியமாகப் பயணம் செய்து தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை செவ்வி கண்டு விட்டு வவுனியா முன்னரங்கப் பகுதிகள் ஊடாக தெற்கு நோக்கி நுழைய முற்பட்ட பொழுது சிங்களப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் தனது ஒரு கண்ணை இழந்தார்.

முன்னணி ஊடகவியலாளர் என்ற வகையில் பல்வேறு உலகத் தலைவர்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருந்த பொழுதும் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்தும் துணிச்சலுடன் குரல் கொடுத்து வந்த மேரி கொல்வின் அம்மையாருடன் நல்லுறவைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையும் பேணி வந்தது.

நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதி நாட்களில் மேரி கொல்வின் அம்மையாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள், சிங்களப் படைகளின் இனவழிப்பு யுத்தத்தில் இருந்து வன்னி மக்களை பாதுகாப்பதற்கு அமெரிக்க அதிபரினதும், பிரித்தானியப் பிரதமரினதும் உதவியைப் பெற்றுக் கொடுக்குமாறு இவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் பின்னர் 2009 மே 17ஆம் நாள் இரவு இறுதியாக மேரி கொல்வின் அம்மையாருடன் தொடர்பு கொண்ட பா.நடேசன் அவர்கள், மக்களை பாதுகாக்கும் நிமித்தம் நிராயுதபாணியாக வெள்ளைக் கொடியுடன் சிங்களப் படைகளின் முன்னரங்க நிலைகளை நோக்கித் தான் செல்ல இருப்பதை தெரிவித்ததோடு, தன்னுடன் கூடச்செல்லவிருக்கும் நிராயுதபாணிகளான காயமடைந்த ஏனைய போராளிகளினதும், மக்களினதும் பாதுகாப்பிற்கு மேற்குலகின் உத்தரவாதத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு கோரியிருந்தார்.

பா.நடேசன் அவர்களை சிங்களப் படைகள் படுகொலை செய்த போர்க்குற்றத்திற்கான சாட்சிகளில் ஒருவராக விளங்கிய மேரி கொல்வின் அம்மையார் சிரியாவில் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகத் தமிழர்களின் இதயத்தில் இடியாக வீழ்ந்துள்ளது.

அம்மையாரின் மறைவுக்கு vvtuk.com இணையம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, அவரது குடும்பத்தினதும், உலகத் தமிழர்களினதும் துயரத்தில் இணைந்து கொள்கின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *