
சயின்ஸ் எனும் இதழக்கு பிரதமர் அளித்த பேட்டி, அவருடைய அரசு இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா எரிசகத்தியில் தன்னிறைவு அடைவதை விரும்பாத அந்த சக்திகளே கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராகவும், மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய்க்கு எதிராகவும் மக்களைத் தூண்டி வருகின்றன என்று பிரதமர் கூறியுள்ளார்.
உண்மை இவ்வாறிக்க, அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை அந்நிய சக்திகளே தூண்டி விடுகின்றன என்று பிரதமர் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். மக்களின் அச்சத்தைப் போக்காமால் அவர்களின் நியாயமான போராட்டத்தை இப்படி கொச்சைப்டுத்துவது அவர் வகிக்கும் பதவிக்கு உகந்த செயல் அல்ல.
மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய்க்கு என்ன அவசியம் ஏற்பட்டது? மக்கள் கேட்காததை, விவசாயிகள் விரும்பாததை, அதைக் கண்டுபிடித்த அமெரிக்கா நாட்டு மக்கள் ஏற்காததை நமது நாட்டு மக்கள் மீது திணிக்க முற்படுவது ஏன்? பிரதமரின் நாட்டம் மக்கள் நலனை புறக்கணிப்பதாகவும், பெரு நிறுவனங்களின் நலனை காப்பதாகவும் மட்டுமே உள்ளது. சிந்திக்கத் தெரிந்த மக்களெல்லாம் கூடங்குளம் அணு உலையை ஏற்கிறார்கள் என்று கூறுகிறார். அணு உலையை எதிர்த்துப் போராடும் மக்களை பிரதமர் சந்தித்துப் பேசட்டும், அப்போது தெரியும் அம்மக்களின் சிந்தனைத் திறன்.
தங்களுடைய வாழ்விற்கும், வாழ்வாதரங்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாக அணு மின் நிலையம் இருக்கிறது என்பதே கூடங்குளம் மக்களின் போராட்டத்தின் அடிப்படையாகும். மத்திய மாநில அரசுகள் அமைத்த நிபுணர் குழுக்கம் மக்களைச் சந்தித்துப் பேசாமல் அரசிடம் மட்டுமே அறிக்கைகளை கொடுத்துவிட்டு தப்பி விடுகின்றனர். மக்களைக் கண்டு ஏன் இந்த அச்சம்? பிரதமரே கூடங்குளத்திற்கு நேரடியாக வரட்டும், மக்களிடம் பேசட்டும். போராட்டம் மக்களின் எழுச்சியா அல்லது அந்நிய சக்திகளின் தூண்டுதலா என்பதை அவர் நேரடியாக அறிந்துகொள்ளலாம்.
தலைமை ஒருங்கிணைப்பாளர்