சென்னை : சென்னையில் வங்கி கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக பீகார் மாநில தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் சென்னை வருகின்றனர். சென்னையில் இரு வங்கிகளில் 5 பேர் கொண்ட கும்பல் ரூ.39 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது. கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு இந்த கொள்ளையர் குடியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை பிடிக்க 22 ம் தேதி அதிகாலையில் வீட்டை போலீஸ் சுற்றிவளைத்தது. இதில் கொள்ளையருக்கும் போலீசுக்கும் இடையே நடந்த மோதலில் 5 கொள்ளையர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ரவி, கிறிஸ்டின் ஜெயசீல் ஆகியோர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தில் 2 ரிவால்வர், 5 கை துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டன. ஏராளமான குண்டுகளும் சிக்கின. மேடவாக்கம் வங்கியில் கொள்ளையடித்த 14 லட்சம் அப்படியே இருந்தது.
அதையும் கைப்பற்றினர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மாஜிஸ்திரேட் கீதா ராணி, சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டார். குண்டு துளைக்கப்பட்ட சுவர்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீட்டில் 4 அடையாள அட்டைகளும், ஒரு ஓட்டுநர் உரிமம் இருந்தது. அதில் 5 பேரின் புகைப்படங்களும், முகவரியும் இருந்தது.
அதில் 4 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதனால் இரு மாநில டிஜிபிக்களுக்கும் சென்னை போலீசார் தகவல் தெரிவித்தனர். சென்னை போலீசார் கொடுத்த முகவரிக்கு போலீசார் சென்றதுபோது, அது போலியான முகவரி என்று தெரியவந்தது. இந்த தகவலை சென்னை போலீசுக்கு பீகார் மற்றும் மேற்கு வங்க போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார், அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, அம்மாநில தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் சென்னைக்கு வந்து, போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது என்கவுன்டர் குறித்து ஆய்வு நடத்துகின்றனர்.
இந்த தகவலை தமிழக போலீசுக்கும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக குழு பீகார் விரைகிறது: வினோத் குமார் தவிர, மற்ற 4 பேர் பற்றி விசாரிக்க ஒரு உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை போலீசார் பீகார் மற்றும் மேற்கு வங்கத்துக்கு செல்கின்றனர். அங்கு கொள்ளையர்கள் மீது வேறு வழக்குகள் உள்ளதா? என்பது பற்றிய தகவல்களை விசாரிக்கின்றனர்.
25 லட்சம் எங்கே?
வினோத் உறவினர் கப்சிப்
வீட்டில் ஒரு செல்போனையும் போலீசார் கைப்பற்றினர். அது யாருடைய பெயரில் உள்ளது என்று பார்த்தபோது கும்பலின் தலைவன் வினோத்குமார் பெயரில் இருந்தது. ஆனால் முவகரி தவறாக இருந்தது. இதனால் அந்த செல்போனுக்கு யாரெல்லாம் பேசியுள்ளனர் என்று விசாரணை நடத்தினர். அப்போது, ஒரு குறிப்பிட்ட போனுக்கு அடிக்கடி பேசியது தெரியவந்தது. அந்த போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டு பேசினர்.
அதில் பேசியவர், இந்தியில் பேசினார். போலீசார் சுட்டுக் கொன்ற வினோத்குமாரின் உறவினர் என்றும், அடையாள அட்டையில் உள்ளது போலியான முகவரி. மாவட்டமே தவறு என்று தெரிவித்துள்ளார். தங்களை போலீசார் கைது செய்யக் கூடாது. ஏற்கனவே கொள்ளையடிக்கப்பட்ட 25 லட்சத்தை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அதனால் எங்களிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் இருந்தால், நாங்கள் சென்னை வருகிறோம் என்றார். போலீசாரும், நீங்கள் வந்து வினோத்தின் உடலை வாங்கிச் செல்லுங்கள் என்றார். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.
ஆனால், வினோத்தின் பெற்றோர் பற்றியோ, முகவரி பற்றியோ தகவல் தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் வந்த பிறகுதான் வினோத் பற்றிய முழு விவரங்களும் தெரியும். அதேநேரத்தில் கூட்டாளிகளாக உள்ள மற்ற 4 பேர் பற்றி எந்த தகவலும் தெரிவிக்க மறுத்துவிட்டார். அதேநேரத்தில், நேற்று மாலை விமானத்தில் சென்னை வருவதாக தெரிவித்தார். ஆனால் வரவில்லை.