புதுடெல்லி : வங்கி பணிகள் தனியார்மயம் ஆவதை எதிர்த்தும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், பொதுத் துறை வங்கிகளின் 8 லட்சம் ஊழியர்கள் நாளை ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதற்கு 7 சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. பொதுத் துறை வங்கிகளை சீரமைக்க கன்டேல்வால் கமிட்டியை மத்திய அரசு நியமித்தது. இந்த கமிட்டி, வங்கி பணிகளை தனியார்மயம் ஆக்க(அவுட்சோர்சிங்) பரிந்துரைத்துள்ளது. அதேபோல், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனங்களில் தரத்தை மேம்படுத்தவும், மேலும் பல சீர்திருத்தங்களையும் கூறியுள்ளது. இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்க கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கன்டேல்வால் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் வங்கி ஊழியர்கள் நாளை(28ம் தேதி) ஒரு நாள் ஸ்டிரைக் செய்கின்றனர். இந்த ஸ்டிரைக்கிற்கு 7 சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இது பற்றி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க(ஏஐபிஇஏ) பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:
வங்கி பணிகளை தனியார்மயம் ஆக்குவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். மொத்தம் உள்ள 9 ஊழியர் சங்கங்களில் 7 சங்கங்கள் ஸ்டிரைக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால், 28ம் தேதியன்று பொதுத் துறை வங்கிகளில் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஸ்டிரைக்கால் நாடு முழுவதும் உள்ள பொதுத் துறை வங்கிகளின் 87,000 கிளைகளில் பணிகள் ஸ்தம்பிக்கும்.
1 லட்சம் காலியிடங்கள்: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளில் காலியாக உள்ள சுமார் 1 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தனியாரிடம் ஒப்படைக்கின்ற மத்திய அரசின் புதிய பென்ஷன் மசோதாவை கைவிட வேண்டும் என்றும் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட் டமைப்பு துணை செயலா ளர் விஜயகுமார் கூறியதாவது: தமிழகத்தில் மட்டும் 50,000 பேர் பங்கேற்கின்றனர். இதனால், அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள 74,505 ஏடிஎம் மையங்கள், தமிழகத்தில் 2,000 ஏடிஎம் மையங்களின் சேவைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிளார்க், கேஷியர்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் அன்றைய தினம் செக் பரிவர்த்தனை, காசோலை மாற்றம் போன்றவை முழுமையாக ஸ்தம்பிக்கும். கவுண்டர் சர்வீஸ் பாதிக்கப்படும். கோரிக்கைகளை வலியுத்தி வங்கி ஊழியர்கள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
ஏடிஎம் சேவை பாதிக்கும்?
இப்போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், வங்கி இன்சூரன்ஸ், தொலை தொடர்புத்துறை, அஞ்சல் துறை உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்கள் என மொத்தம் 30 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். இதனால் வங்கிகள் மற்றும் ஏடிஎம் சேவைகள், அஞ்சல் துறை பணிகள் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.