பிரித்தானிய தமிழர் விளையாட்டு லீக் நடத்தும் உதைபந்தாட்ட லீக் போட்டிகளின் இந்த வருடம் இரண்டாம் பிரிவில் விளையாடி வரும் வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகம் மூன்று போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் ஏற்கனவே அடுத்த வருடம் பிரிமியர் பிரிவில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளது.
இன்று 26 /02 /2012 அன்று சென்ட் அன்டனிஸ் கழகத்தை எதிர்த்து மோதியிருந்தது. வெற்றி பெற்று மூன்று புள்ளிகளை பெற்றால் இரண்டாம் பிரிவின் சாம்பியன் ஆகும் நிலையில் போட்டிக்குள் சென்றது வல்வை புளூஸ் அணி . ஆனால் இன்றைய போட்டியில் வல்வை புளூஸ் அணியால் இன்று வெற்றி பெறமுடியாமல் போட்டி வெற்றி தோல்வியின்று 1 -1 என்ற கோல்கள் அடிப்படையில் முடிவு பெற்றது. இது இவ்வாறிருக்க இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் சம புள்ளிகளில் புளூஸ் கழகத்திற்கு பத்து புள்ளிகள் பின்னிலையில் இருந்த சுபன் விளையாட்டுக்கழகம் மூன்றாம் நிலையில் உள்ள நோர்த் வெஸ்ட் லண்டன் கழகத்தை எதிர்த்து மோதியிருந்தது. இந்தப் போட்டியும் 3 -3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றதால் அவர்களால் புளூஸ் கழகத்திற்கும் தங்களிற்கும் இடையிலான புள்ளி வித்தியாசத்தை குறைக்க முடியவில்லை.
இந்த வருடம் இரண்டாம் பிரிவில் 6 கழகங்களே உள்ளபடியால் ஒவ்வொரு கழகங்களும் ஏனைய ஒவ்வொரு கழகங்களையும் எதிர்த்து மூன்றுமுறை மோதவேன்டியிருந்தது. இன்னும் மூறு போட்டிகள் எஞ்சியுள்ளன. ஒரு போட்டியில் வெற்றிபெறும் அணி ஆகக் கூடியதாக மூன்று புள்ளிகளே பெறமுடியும். இந்நிலையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் இருக்கும் அணிகள் எஞ்சியிருக்கும் ஒவ்வொரு போட்டியையும் அவர்கள் வெற்றி பெற்றால்கூட இன்னும் ஒன்பது புள்ளிகளே பெறமுடியும். புளூஸ் அணி ஏற்கனவே பத்து புள்ளிகள் வித்தியாசத்தில் உள்ளபடியால் இன்றுடன் வல்வை புளூஸ் கழகம் பிரித்தானிய தமிழ் விளையாட்டு லீக் இரண்டாம் பிரிவின் 2011 /2012 சாம்பியனாக உறுதி செய்யப்பட்டது.
கடந்த மூன்று வருடமாக இரண்டாம் பிரிவில் விளையாடிவந்த வல்வை புளூஸ் கழகம் ஒவ்வொருமுறையும் இறுதிப்போட்டியில் வெற்றிபெறாமையால் இருமுறையும் பிரிமியர் பிரிவிற்கு செல்ல முடியவில்லை. இந்தவருடம் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்ட ஜெயக்குமார் மற்றும் ரிஷி ஆகியோரின் திறமையான பயிட்சிகளாலும் சிறப்பான வழிநடத்தல்களாலும், அவர்களின் வழிநடத்தலில் சிறப்பாக விளையாடிய வல்வை புளூஸ் வீரர்களின் பங்களிப்பினாலும் இந்த வருடம் மூன்று போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையிலே சம்பியன்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.