யாழ். குடாநாட்டின் சிகரங்களை எல்லாம் தாண்டி அப்பாலும் சென்ற வெற்றிக் கழகம்..
வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகம் இன்று தனது 50 வருட பொன் விழாவை வெற்றிகரமாகக் கொண்டாடி முடித்துள்ளது..
தினகரன் விளையாட்டு விழா, யாழ். முற்றவெளி காணிவல் போல யாழ். குடாநாட்டின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விளையாட்டு பெருவிழாவை நடாத்திய கழகம் இது..
அறுபதுகளின் யாழ் குடாநாட்டை நினைவில் வைத்திருப்போருக்கு வல்வை உதயசூரியன் ஆண்டுவிழா அந்தக் குடாநாட்டின் இந்திரவிழா போல என்றும் நினைவிருக்கும்.
அந்தக் கழகத்திற்கு தூணாக நின்றவர்கள் பலர், ஆனாலும் இந்த நேரத்தில் அதற்கு பொருளாதார பலம் கொடுத்து, பெரும் தூணாக நின்ற பரஞ்சோதி அப்பாவை மனதால் பாராட்டிக்கொள்கிறேன்…
அந்தக்கழகத்தின் விளையாட்டு விழா தொடர்பான மோதலில் உயிர் கொடுத்து வாயிலில் வளைவாக நிற்கும் இரா. அரசரெத்தினம் அவர்களையும் வணங்கிக் கொண்டு, பொன்விழா நினைவுகளுக்குள் நுழைகிறேன்.
1967 ல் ஒரு நாள்… சிறுவன்.. நல்ல உறக்கத்தில் இருக்கிறேன்… நேரம் அதிகாலை ஆறு மணி..
படீர் என்ற அவுட் வாணம் வானத்தில் வெடிக்கிறது.. அன்பர்களே.. இன்னுமா உறக்கம் இதோ உங்கள் உதயசூரியன் ஆண்டுவிழா ஆரம்பமாகிவிட்டது.. ஒலி பெருக்கி முழங்குகிறது…
ஆனந்தம்… இனி இரண்டு நாட்கள் குதூகலம்தான் படுக்கையால் எழுந்து நெடியகாட்டு பிள்ளையார் வீதி நோக்கி ஓடுகிறேன்…
பான்ட் வாத்தியத்துடன் முதலாவது அணிவகுப்பு போகிறது..
காலஞ்சென்ற கம்பர்மலை அப்புத்துரையின் சவுண்ட் சேவீசில் இருந்து பாடல் காதுகளை வருடுகிறது… அந்த லவுட்ஸ்பீக்கர் இப்போதும் என் இதயத்தில் அதே நாதத்துடன் பாடிக்கொண்டே இருக்கிறது… புதுமை.. புதுமை.. புதுமையாக.. என் உள்ளத்தில் என்றுமே அதற்கில்லை முதுமை..
புத்தம் புதிய புத்தகமே.. உன்னைப் புரட்டிப்பார்க்கும் புலவன் நான் ஏட்டைப் புரட்டி பாட்டைப் படிக்கும் வீட்டுப் புலவன் நாயகிநான்… 1967 வெளியான அரசகட்டளை திரைப்படப் பாடல் அது.. மனதிற்குள் முணுமுணுத்துக் கொள்கிறேன்..
பிள்ளையார் கோயில் வீதியில் நூற்றுக்கணக்கான பந்தய மிதிவண்டிகள், கொழும்பு முதற்கொண்டு நமது பக்கத்து வீட்டு வைரமுத்து கந்தசாமி முதற்கொண்டு புகழ்பெற்ற வீரர்கள் ஓடத்தயார் நிலையில்..
அந்த வாரம்தான் கொழும்பில் இருந்து நமது கந்தசாமிக்கு புத்தம் புதிய ரேசிங் சைக்கிள் இறக்கப்பட்டிருந்தது.. வெல்வாரா.. வெல்லவில்லை ஆனால் நினைவில் நிற்கிறார்.
வெல்பவருக்கு புத்தம் புதிய ரேசிங் சைக்கிள்… வெடிச்சத்தம்.. சீறிப்பாய்கின்றன மிதிவண்டிகள்.. 25 மைல்கள் ஓட வேண்டும்…
அடுத்து என்ன.. மரதன் ஓட்டம்.. யார் இந்த மலைபோன்ற உருவங்கள்.. என்றுமே பார்க்காதவர்கள்.. இலங்கையின் பிரபல மரதன் ஓட்ட வீரர்கள் என்;கிறார்கள்.. நூற்றுக்கணக்கில்.. வெடிச்சத்தம்… மரதன் வேகமாகப் பறக்கிறது.. நம்மூர் கலிங் வெல்வாரா என்பது பலரது ஆவல்..
சொற்ப நேரத்தில் ஆரம்பிக்கிறது விநோத உடைப்போட்டி.. நெடியகாட்டில் இருந்து, மதவடிவரை போகும் ஊர்வலம்..
நூற்றுக்கணக்கான போட்டியாளர்.. யார் இவர்கள்… குடாநாடே திரண்டுவிட்டதே..
எத்தனை ஆற்றலாளர் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அது போய்க்கொண்டே இருக்கும், வீதி நிறைய மக்கள் வெள்ளம் அலை மோதும்..
ஓடி ஓடியோடிப் பார்ப்பேன்.. யார் வெல்வார்கள்..
மரத்தைத் தூக்கிச் செல்லும் ஆபிரிக்க அடிமைகள், கர்ப்பிணிப் பெண், மீன் விற்கும் பெண்கள் போன்றன வெற்றிபெற்ற காட்சிகள் மனதில் ஆடுகின்றன..
அது நடைபெற்று மதவடி செல்ல, நீச்சல்போட்டி வீரர்கள் தொண்டைமானாற்றில் இருந்து நீந்திக்கொண்டு மதவடி வந்துவிட்ட செய்திவர கடற்கரைப் பக்கமாக வேகமாக ஓடுவேன்..
அதைப்பார்த்துக் கொண்டிருக்க கடற்கரையின் வட்டி வழியாக பாரத்தைத் தூக்கிக்கொண்டு வட்டி ஓட்டம் ஆரம்பித்திருக்கும்..
இதோ சைக்கிள் ஓட்ட வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்… அப்புத்துரையின் ஒலி பெருக்கி முழங்கிக் கொண்டு வருவது கேட்கும்… யார் வென்றார்கள்.. தபாற்கந்தோருக்கு முன்னால் அது முடிவடையும் ஆவலுடன் அங்கே ஓடுவேன்…
அதைப்பார்க்க மரதன் ஓட்டம் வந்து முடிவை நோக்கி வந்து கொண்டிருக்கும்…
காலை ஆறுமணிக்குக் கேட்ட வெடிச்சத்தத்தில் ஓட ஆரம்பித்தவன் மதியம் ஒரு மணிவரை சோளகக்காற்றில் பறந்த பஞ்சுபோல திசை தெரியாமல் பறந்து கொண்டிருப்பேன், உணவு குடிநீர் எல்லாமே மறந்து போய்விடும்..
இரண்டு மணிக்கு மதவடிக்கடற்கரையில் இல்ல விளையாட்டுப் போட்டி ஆரம்பிக்கும்..
அழகழகான இல்லங்கள் கடற்கரையை அலங்கரித்து நிற்கும்.. பச்சை இல்லம், சிவப்பு இல்லம் என்று வீரர்கள் போட்டிக்கு தயாராக நிற்பார்கள்..
பார்வையாளருக்கான விளையாட்டுக்களும் நடைபெறும்..
தலையணைச் சண்டை, பாண் கடித்தல், தடையோட்டம் என்று ஏகப்பட்ட விளையாட்டுக்களால் அன்றைய மாலை தன்னை அலங்கரிக்கும்.
அன்றைய தினம் வல்வை பக்கத்து ஊர்களால் நிறைந்து கிடக்கும்..
மறுநாள்… பரபரப்பான நாள்.. பெரிய போட்டிகளுக்கான பரிசுகள், நாடகப்போட்டி, புழுகு போட்டி என்று அன்றைய இரவு சிவராத்திரியாக கண்விழிக்க வைக்கும்.
லைற் போட்டிக்கோ சோடனைகள்.. மின் அலங்கார வளைவுகள் என்று நட்சத்திர மண்டலத்தில் மிதக்கிறேனா என்று மனம் கேட்கும்..
ஐந்து நிமிடங்கள் கொண்ட புழுகு போட்டியில் பலர் பங்கேற்று சிரிக்க வைப்பார்கள், வென்றவருக்கு தங்கப்பதக்கம்.
கிளிநொச்சி தங்கம் என் தங்கம் நாடகத்தில் பெண்ணாக நடித்த காலஞ்சென்ற கலைஞர் நாதன் பல தடவைகள் புழுகு போட்டியில் வென்றுள்ளார்.
அதன் பின்னர் முல்லைத்தீவு வவுனியா முதற்கொண்டு குடாநாட்டின் அத்தனை புகழ்பெற்ற நாடகங்களும் போட்டியில் மோதும்..
கலையரசு சொர்ணலிங்கம், பேராசிரியர் கா. சிவத்தம்பி, சாந்தமூர்த்தி, இரத்தினவடிவேல், அந்தோனிப்பிள்ளை போன்றவர்கள் மத்தியஸ்தர்களாக கடமையாற்றுவார்கள்.
கூடியிருப்பது மனித சமுத்திரமா இல்லை கடலா என்று தெரியாதளவுக்கு ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் நிறைந்திருப்பார்கள்..
அது என்ன அற்புதமான போட்டி.. அறுபதுகளில் என் நினைவில் நின்ற வெற்றி பெற்ற நாடகங்கள்..
வ.ஆ.அதிரூபசிங்கத்தின் : மகனே கண் – காசியப்பன் கதை. வல்வை பாரதி கலாமன்றம் வழங்கிய உயிரோவியம்
முல்லைத்தீவு கலாமன்றத்தின் அம்பிகாபதி இசை நாடகம் பாசையூர் கலாமன்றம் வழங்கிய கண்திறந்தது.. வெற்றிலைக்கேணி நாடகம் பெயர் மறந்துவிட்டது அதில் வரும் ஒரு பாடல் மட்டும் நினைவில் உள்ளது.. கத்தரித்தோட்ட கனகு மச்சான் பார்வையிலே படம் பிடித்தான்.. பருத்தித்துறை இருதயராஜ் தீக்குச்சி நாடகத்தில் பாதராக நடித்தது.. பல்வைத்தியர் டேவிட் பழனிவேல் கலந்தபழம் குட்டி என்று சிங்களவனாக நடித்தது.. அந்தக்குழந்தை நாடகத்தில் வல்வை குகன் மன்னனாக நடித்தது.. பாலூட்டுவது யாரில் எஸ்.ஜெயபாலசிங்கத்தின் நடிப்பு.. தங்கம் என் தங்கம்.. இவைகள் எல்லாம் அறுபதுகளில் சுழன்றோடும் நாடகப் பக்கங்கள்..
நாடகங்களைப் பார்த்து உறங்காத கண்களுடன் வீடு செல்லும்போது உதய சூரியன் கீழ்வானத்தில் கிளம்புவது தெரியும்.. தூங்கியது பாதி தூங்காதது பாதியாக பாடசலை செல்லும்போது..
உதய சூரியன் ஆண்டுவிழா எப்போது வரும் என்ற கனவுகளுடன் நடப்பேன்..
என்போன்றவர்களை நாடக, திரைப்படக் கலைஞராக உருவாக களம் அமைத்ததே உதயசூரியன் ஆண்டுவிழாதான்.
இரா. அரசரெத்தினத்தின் மரணம், விடுதலைப்போர் போன்றவற்றால் பிற்காலத்தில் அது தளர்வு கண்டது..
இன்று வெளிநாடு ஒன்றில் இருந்து அதன் பொன்விழா கொண்டாடப்படும் செய்தியை இணையங்கள் வழியாக அறிகிறேன்..
கட்டியண்ணா, குட்டிமணி அண்ணா, தங்கவேல் அண்ணா, குகநாதன் போன்ற என்கால வீரர்களையும், சிறிதரன் போன்ற நண்பர்களையும் அந்த இடத்தில் காண்கிறேன்..
அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.. பொன்விழாவில் நேரடியாக பங்கேற்கிறார்கள்..
அன்னபூரணி அமெரிக்கக் கரையைத் தொட்ட 75வது ஆண்டும், உதயசூரியன் 50 வது ஆண்டும் அங்கு நடக்கிறது…
உதய சூரியன் ஆண்டுவிழாவை தாயகத்தில் இருந்து சுவைப்பதைவிட வெளிநாட்டில் இருந்து சுவைப்பது தனியான சுவை.
காலத்தின் அழகு வல்வையில் உள்ளவர்களுக்கு, காலத்தோடு தூரத்தின் அழகு நமக்கு..
வல்வை உதயசூரியன் வரலாறு தனி நூலாக எழுதுமளவுக்கு உள்ளத்தில் கொட்டிக் கிடக்கிறது..
மறுபடியும் அந்தப் பொற்காலம் நமது மண்ணில் வரவேண்டும்…
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா..?
கி.செ.துரை 11.08.2013