சென்னை : மத்திய அரசை கண்டித்து 11 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் ஆட்டோக்கள், கார், பேருந்து போன்ற சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கோவை மற்றும் திருப்பூர் நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, இன்று நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் 10 கோடி பேர் பங்கேற்கின்றனர். இதனால் தமிழகத்தில் 20 ஆயிரம் வங்கி கிளைகள் இயங்கவில்லை.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை 10,000 ஆக உயர்த்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், பிஎம்எஸ் போன்ற மத்திய தொழிற்சங்கங்களும், தொலைத்தொடர்பு, வங்கி, காப்பீடு, பாதுகாப்பு, அஞ்சல் துறை போன்ற பொதுத்துறை நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளன. இதனால், போக்குவரத்துத் துறை, மின்வாரியம், நுகர்பொருள் வாணிபக்கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம், கூட்டுறவு ஊழியர் சங்கங்கள், சர்க்கரை ஆலை ஊழியர்கள், சிமென்ட் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக தொழிற்சங்கம் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை
அதிமுக தொழிற்சங்கம் மட்டும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால், அரசு பஸ்கள் இயங்கும் என்று அந்த தொழிற்சங்கம் மட்டும் அறிவித்துள்ளது. மேலும், அமைப்புசாரா தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்திற்கு சென்னையில் போதிய ஆதரவு இல்லை. இதனால் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. மேலும் சென்னை நகரில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளும் வழக்கம் போல் இயங்குகின்றன. சென்னை துறைமுகத்திலும் இறக்குமதி, ஏற்றுமதி பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. போராட்டம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க (ஏஐபிஇஏ) பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் சென்னையில் அளித்த பேட்டியில் இந்தியா முழுவதும் வரலாறு காணாத வகையில் 10 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விலைவாசி உயர்வால் தொழிலாளர்கள் மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்து வருகின்றார்கள்.
45 லட்சம் நிரந்தர தொழிலாளர்கள் வேலை இழப்பு
பொருளாதார தேக்கம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 45 லட்சம் நிரந்தர தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளார்கள். தொழிலாளர் சட்டங்களை முதலாளிகள் மீறி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு அரசு சாதகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தொழிற்சங்கங்களை பதிவு செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. பொதுத்துறையை தனியாருக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தாரை வார்த்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கையை கைவிட வேண்டும். இந்தியா முழுவதும் 25 பொதுத்துறை வங்கிகள், 25 தனியார் துறை வங்கிகள், 26 அயல்நாட்டு வங்கிகளை சேர்ந்த பல ஆயிரம் கிளைகள் உள்ளன. 7 ஆயிரம் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. இவற்றில் பணியாற்றும் 9 லட்சம் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 20 ஆயிரம் வங்கி கிளைகள் உள்ளன. இதில், பணியாற்றும் 50 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், அனைத்து வங்கி பணிகளும், இன்சூரன்ஸ் பணிகளும் முழுமையாக முடங்கியுள்ளன. வேலை நிறுத்தப் போராட்டத்தில் 7 வங்கி ஊழியர் சங்கங்கள், 6 இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் முழு அளவில் பங்கேற்றுள்ளனர்.
கேரளா செல்லும் பேருந்துகள் ரத்து
வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரியிலிருந்து கேரளா செல்ல வேண்டிய பேருந்துகள் கனியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் அரசு பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்தும் தமிழகத்துக்கு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.