அணுஆயுத குவிப்பு விவகாரம் ஈரான் மீது போர் கடைசி அஸ்திரம்!

வாஷிங்டன்: ஈரான், அணு ஆயுதங்கள் குவிப்பதை நிறுத்தாவிட்டால், கடைசி அஸ்திரமாக அதன் மீது போர் தொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் ஈரான் தொடர்ந்து அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக அமெரிக்கா, ஐரோப்பா குற்றம் சாட்டி வருகின்றன. இதை ஈரான் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, ஈரான் மீது பொருளாதார தடை விதித்ததுடன், உலக நாடுகள் ஈரானுடன் வர்த்தக தொடர்பு வைக்கக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியது. எனினும், இந்தியா, சீனா நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இந்நிலையில், வாஷிங்டனில் வெளியாகும் தி அட்லாண்டிக் பத்திரிகைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்துள்ள பேட்டி வருமாறு:

ஈரான் அணுஆயுதம் குவிப்பதை ஏற்று கொள்ள முடியாது. இந்த நடவடிக்கையை அந்நாடு கைவிட வேண்டும். பொருளாதார தடை, தூதரக நடவடிக்கை போன்றவற்றின் மூலம் ஈரானை நிர்ப்பந்திப்போம். ஆனாலும், வேறு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஈரானின் அணு ஆயுதங்களை அழிக்க, கடைசி அஸ்திரமாக போர் புரியவும் வாய்ப்பு உள்ளது. இதை ஈரான் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல், ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேல் அவசரப்படக் கூடாது என எச்சரித்து வருகிறோம். அப்படி இஸ்ரேல் அவசரமாக தாக்குதல் நடத்தினால், அது ஈரானுக்கு அனுதாபம் தேடி வந்து விடக் கூடும். இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.