மாஸ்கோ: ரஷ்யாவில் நேற்று அதிபர் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. இதில், இப்போதைய பிரதமர் விலாடிமிர் புடின் 60 சதவீத வாக்குகள் பெற்று, 3வது முறையாக அதிபர் ஆவார் என கருத்துகணிப்புகள் கூறுகின்றன. ரஷ்யாவில் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி வெற்றி பெற்றது. எனினும், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, புடினுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 90 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவை கண்காணிக்க 1 லட்சம் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. பிரதமர் புடின் மற்றும் அதிபர் மெட்வதேவ் ஆகியோர் ஓட்டு போட்டனர். தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தனது மனைவி லிட்மிலாவுடன் வந்து ஓட்டு போட்ட புடின் கூறுகையில்,
அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமானது. எனவே, பெரும்பாலான மக்கள் தங்கள் கடமையை செய்திருப்பார்கள் என நம்புகிறேன் என்றார். அதிபர் தேர்தலில் மொத்தம் 5 பேர் போட்டியிடுகின்றனர். ஐக்கிய ரஷ்ய கட்சி சார்பில் இப்போது பிரதமராக உள்ள விலாடிமிர் புடினும் (59), முக்கிய எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கென்னடி யுகனோவும் போட்டியிடுகின்றனர். இதுதவிர, அல்ட்ரா தேசியவாத கட்சியின் விலாடிமிர் ஸிரினோவ்ஸ்கி, மிகைல் பொகோரோவ் (சுயேச்சை), மேல் சபை முன்னாள் சபாநாயகர் செர்கே மிரனோவ் ஆகியோர் மற்ற வேட்பாளர்கள். இவர்களில் புடினுக்கு 60 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், 2வது இடம் பிடிக்கும் கென்னடி 15 சதவீத ஓட்டுகளே பெறுவார் என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
கடந்த 2000 முதல் 2008 வரை தொடர்ந்து 2 முறை அதிபர் பதவி வகித்தார் புடின். அந்நாட்டு சட்டப்படி, தொடர்ந்து 2 தடவைக்கு மேல் அதிபராக முடியாது என்பதால், 2008ல் தனது கட்சியைச் சேர்ந்த மெட்வதேவை அதிபராக்கினார். தேர்தல் நடைமுறைகளில் கடந்த ஆண்டு சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி, 4 ஆண்டுகளாக உள்ள அதிபரின் பதவிக் காலம் 6 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புடின் தேர்தலில் வெற்றி பெற்றால் 3வது முறையாக அதிபராவார். ஓட்டு எண்ணிக்கை நேற்றே துவங்கியது. இன்று அதிகாலையில் முடிவுகள் வெளியாகும். புடின் அதிபரானால் டிமிட்ரி மெட்வதேவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது.