Search

நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் – சீமான் கண்டனம்‏

நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் மீது பொய் வழக்கு, தாக்குதல்சீமான் கடும் கண்டனம்

 இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் கண். இளங்கோ உள்ளிட்ட 4 பேர் மீது உண்மைக்குப் புறம்பான ஒரு புகாரைப் பெற்று, பொய் வழக்குத் தொடர்ந்தது மட்டுமின்றி, அவர்களைக் கைது செய்த காவல் துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 கண். இளங்கோ விற்ற ஒரு நிலம் தனக்கு உரியதென நீண்ட காலமாக அரசியல் செல்வாக்குப் பெற்ற ஒரு பெண் பிரச்சனை செய்து வந்துள்ளார். அந்த நிலத்திற்கும் அந்த பெண்ணிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நில அளவீட்டுத் துறையினர் அளந்து கொடுத்து பிரச்சனையை முடித்து விட்டனர். இந்த நிலையில் நேற்று அடியாட்களைக் கொண்டு வந்து இளங்கோவன் உள்ளிட்ட தம்பிகளுடன் அடிதடியில் ஈடுபட்டுள்ளார். அந்த நிலம் தொடர்பான உண்மை என்னவென்று தெரிந்தும், அந்தப் பெண்ணிடம் ஒரு புகாரைப் பெற்றுக்கொண்ட இராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன், இளங்கோ உள்ளிட்ட தம்பிமார்களை கைது செய்து, எவ்வித அடிப்படையுமற்ற 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததுள்ளனர். அது மட்டுமின்றி, மணிவண்ணனும் மேலும் 3 காவல் அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். கொடூரமான இத்தாக்குதலில் இளங்கோவின் கை, கால்களில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற தம்பிமார்களும் பலத்த காயமுற்றுள்ளனர்.

 நிலம் விற்றது தொடர்பான தகராறு மீதான புகார் என்றால், அதன் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தை நாடி கைது உத்தரவுப் பெற்று, அதன் பிறகுதான் விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். அப்படித்தான் மிகப் பெரிய அளவில் நில மோசடி புகாருக்கு ஆளாகியுள்ள முன்னாள், இன்னாள் அரசியல்வாதிகள் மீதும், இன்றைய அரசுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் மீதும் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் கூட காவல் நிலையத்தில் வைத்து தாக்கப்படவில்லை. ஆனால் இளங்கோவை மட்டும் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்திற்கு காவல் துறை உட்படுத்தியது ஏன்?

 இராமேஸ்வரம் கோயிலுக்கு வழிபட வந்த ராஜபக்சாவின் தங்கை கணவர் நடேசனுக்கு எதிர்ப்புக் காட்டியபோது அவர் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் இளங்கோ இருந்தார், அதற்குப் பழிவாங்கவே இப்படி ஒரு புகாரைப் பெற்றுக்கொண்டு காவல் துறை கைது செய்து துன்புறுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது. இளங்கோவை அடிக்கும் போது நடேசன் விவகாரத்தை சொல்லியே காவல் அதிகாரி மணிவண்ணன் அடித்துள்ளார். தங்கள் மீது செருப்பு வீசியதாக நடேசனோ அல்லது அவரோடு இருந்த எவரும் இளங்கோ மீது புகார் தெரிவிக்கவில்லையே. புகார் தெரிவித்திருந்தால் அதன் மீது அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே? ஏன் செய்யவில்லை?

 நடேசனுக்கு எதிர்ப்பு காட்டியதற்காக மத்திய அரசு, தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தின் தாக்கமே இந்தக் கைதும் தாக்குதலும் என்றும் கூறப்படுகிறது. அது உண்மையாக இருப்பின் ராஜபக்ச தங்கை கணவர் தாக்கப்பட்டதற்கு இத்தனை அக்கறையும், எதிர்ப்பும் காட்டும் மத்திய அரசு, இலங்கை கடற்படையினரால் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்டபோது அந்த அக்கறையை காட்டாதது ஏன் என்று தமிழக அரசு திருப்பிக் கேட்டிருக்க வேண்டும். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்கள் இனப் படுகொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த இந்திய மத்திய அரசு, ராஜபக்ச குடும்பத்தினரில் ஒருவர் மீது தமிழ்நாட்டில் செருப்பு வீசப்பட்டதற்கு மட்டும் இவ்வளவு துடிப்பது ஏன் என்றும் தமிழக அரசு கேட்டிருக்க வேண்டும்.

 நாம் தமிழர் கட்சி போன்ற ஜனநாயகப் பாதையில் தமிழின உரிமைக்காக குரல் கொடுத்துவரும் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்களை இப்படி உள் வன்மத்துடன் கைது செய்து, கொடூரமாகத் தாக்கியது கண்டனத்திற்குரியதாகும். தான் வகிக்கும் பொறுப்பிற்கு முரணாக, காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் மீது தமிழக அரசு உடனடியாக துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கண்.இளங்கோ உள்ளிட்ட தம்பிமார்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை நாம் தமிழர் கட்சி சட்ட ரீதியாக எதிர்கொள்ளும். அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மாநில மனித உரிமை ஆணையத்திற்கும் கொண்டு செல்வோம்.

தமிழக காவல் துறையில் உள்ள சில அதிகாரிகள் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் மீது அடிப்படையற்ற வன்மத்துடன் செயல்பட்டு வருகின்றனர். நாகையில் நாம் தமிழர் கட்சியின் சுவரொட்டியை ஒட்டிய தம்பி ஒருவரை காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்று அவருடைய சிகையை வெட்டி அவமானப்படுத்தியுள்ளனர். ஜனநாயக உரிமைகளுக்கு முரணான இப்படிப்பட்ட அநாகரீகமான போக்கை காவல் துறையினர் மாற்றிக்கொள்ள வேண்டும். அறிவை ஆயுதமாகத் தாங்கி, ஜனநாயகப் பாதையில் நடைபோடும் ஒரு அரசியல் கட்சியின் தொண்டர்களை இப்படி அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறான வகையில் துன்புறுத்துவதும், சித்தரவதைக்கு உட்படுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும்.

 

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *