Search

போர்க்குற்ற விசாரணையை ஆதரிக்க இந்தியா தயங்குவது ஏன்? சீமான் விளக்கம்!

இலங்கையில் ராஜபக்ச நடத்திய போருக்கு இந்தியா எல்லா விதத்திலும் உதவியிருப்பதே ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தயங்குவதற்குக் காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறினார்.

சென்னை திருவொற்றியூர், பெரியார் நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் பேசிய சீமான், போர்க்குற்றத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்காது, அப்படி வாக்களித்தால், இந்தப் போரை நடத்தச் சொன்னதே நீங்கள்தானே, அப்படியிருக்க எங்கள் மீது மட்டும் விசாரணை நடத்துமாறு எப்படி நீங்கள் வாக்களிக்கலாம் என்று கேட்பார். அதனால்தான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இலங்கை அரசைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்திய அரசு என்று கூறினார்.

இக்கூட்டத்தில் சீமான் மேலும் பேசியதாவதுஇலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பார்த்து தனது கண்கள் இன்னமும் கண்ணீர் உகுத்துக்கொண்டிருக்கிறது தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறுகிறார். இன்றைக்கு கண்ணீர் சிந்துகிறீர்களே, அன்றைக்கு என்ன செய்தீர்கள்? உலகிலேயே வேகமான ஒரு உண்ணாவிரதத்தை நடத்திவிட்டு, அங்கு போர் நின்றுவிட்டது என்று கூறி முடித்துக் கொண்டீர்கள். அதற்குப் பிறகுதானே அங்கிருந்த தமிழ் மக்கள் மீது கனரக ஆயுதங்களையும், குண்டுகளையும் வீசி தமிழர்களை கொத்துத் கொத்தாக சிங்கள அரசு கொன்று குவித்தது. அதனை உங்கள் தொலைக்காட்சிகளில் கூட காட்டாமல் இருட்டடிப்பு செய்துவிட்டு, இன்றைக்கு ஆட்சி போனவுடன் கண்ணீர் வழிகிறது என்று கூறுகிறீர்களே, மனசாட்சியுடன்தான் பேசுகிறீர்களா?

தமிழ்நாட்டில் இத்தனை திராவிடக் கட்சிகள் இருந்தும் இலங்கையில் தமிழினம் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லையே, ஏன்? ஏனென்றால் பதவியை தக்க வைத்துக்கொள்ள காட்டிய அக்கறை இனத்தை காப்பதில் காட்ட மறுத்ததே காரணம். திராவிடக் கட்சிகள் ஆண்டது போதும், தமிழர்களாகிய நாம் மாண்டதும் போதும். உங்கள் வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன், எம் தமிழினத்தை விட்டுவிடுங்கள். தமிழ்நாட்டில் தமிழரின் ஆட்சி ஏற்பட்டால்தான் உலகின் எந்த மூலையிலும் தமிழன் பாதுகாப்பாக இருக்க முடியும்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தேசிய கட்சிகள் என்று கூறிக்கொண்ட கட்சிகள் அனைத்திற்கும் சாவு மணி அடித்துவிட்டது. தேசிய கட்சிகளை மக்கள் இதற்கு மேலும் நம்பத் தயாராக இல்லை என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தேசிய கட்சிகளின் அரசியல் முடிவுக்கு வந்தால்தான் நமது நாட்டில் உண்மையான கூட்டாட்சி மத்தியிலும், மாநில தன்னாட்சியும் மலரும். அதுவரை கூட்டாட்சியும் பிறக்காது, தன்னாட்சியும் மலராது.

இவ்வாறு சீமான் பேசினார். இக்கூட்டத்தில் மூத்த வழக்குரைஞர் சந்திரசேகர், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் கலைக்கோட்டு உதயம், ஊடகவியலாளர் அய்யநாதன், அன்புத் தென்னரசன், அமுதா, வெற்றிச்செல்வன், இராசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசினர்.
Leave a Reply

Your email address will not be published.