போர்க்குற்றவாளி இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா நிச்சியம் ஆதரவளித்திட வேண்டும் – திருமாவளவன்
இலங்கை அரசின் போர் குற்றத்திற்கு எதிரான ஐ.நா.சபை கொண்டு வர உள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐ.நா.சபையில் நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இலங்கை இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க வல்லரசு வரைவுத் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின் போது இலங்கை அரசு மனித உரிமை மீறல்களைச் செய்து போர் குற்றம் இழைத்து உள்ளதாகவும், அதனை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் எனவும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களை, போர் மரபுகளை அவமதித்தும், மனித உரிமைகளை மீறியும் செயல்பட்ட இலங்கை அரசை மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பின் கீழ் விசாரிக்க வேண்டும் என்றும் இத்தீர்மானம் குறிப்பிடுவதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கின்றது.
இலங்கை அரசுக்கு எதிரான இத்தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கின்றது.
சிங்கள அரசு தப்பித்துக் கொள்ளாத வகையில், இத்தீர்மானத்தை மேலும் வலுவாக்க உரிய திருத்தங்களைச் செய்து நிறைவேற்றுவதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.