Search

“அண்ணனுக்கு பின்னாலும் ஆட்ட நிர்ணயச் சதி. உதயனுக்குப் பின்னாலும் ஆட்ட நிர்ணயச் சதி”

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற உதயன் பத்திரிகையில் கடந்த 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை,“அண்ணா-ஐயா பின்னுக்குத்தான் திட்டமிருந்தது”என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது.

தமிழ்த் தேசியத்தின்பால் நிற்பதாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்ற உதயன் பத்திரிகை மேற்படி கட்டுரையை  வெளியிட்டதன் மூலம் தனது உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. உதயன் பத்திரிகையின் இந்தச் செயல் குறித்து யாழ். குடாநாட்டு மக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

விடுதலைப் போராட்டத்திற்கு முழு ஆதரவளித்ததாக தன்னை வெளிக்காட்டிக்கொண்டிருந்த  உதயன் தற்போது விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளதாகவும் வேற்று இனத்தவர்களின் மத்தியில் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்துள்ளதாகவும் தமிழ் மக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

உதயன் பத்திரிகை கடந்த 25 வருட காலமாக போராட்டத்தின் பெயரால் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தது. தமிழர்களின் போராட்டம் சிங்கள இனவெறி அரசாங்கத்தினால் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து உதயன் பத்திரிகை தனது உண்மை முகத்தை அம்பலப்படுத்தியது.

2009 மே மாதம் 19 ஆம் திகதி தமிழீழ தேசியத் தலைவரும் தளபதிகளும் கூண்டோடு அழிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிக்கை விடுத்திருந்தது. மறுநாள் உதயன் பத்திரிகை தேசியத் தலைவர் உட்பட தளபதிகளின் படங்களையும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற செய்திiயும் தனது முன் பக்கத்தில் பிரசுரித்திருந்தது. அதன் மூலம் தமிழீழ மக்கள் அனைவரையும் உதயன் பத்திரிகை பேரதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியது.

தற்போதும் உதயன் அதே செயற்பாட்டையே மேற்கொண்டுள்ளது. உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவன் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அரசாங்கத்திற்கும் இவருக்கும் நெருக்கமான தொடர்புகள் உள்ளதாக தமிழ் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் தமிழீழ தேசியத் தலைவரையும் போராட்டத்தையும் சொச்சைப்படுத்தும் விதத்திலான கட்டுரையொன்று உதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

உதயனின் மேற்படிச் செயற்பாட்டால் விரக்தியடைந்துள்ள குடாநாட்டிலுள்ள தேசியப் பற்றாளர் ஒருவர் உதயனின் கடந்த காலத்தை விளக்குகிறார்:-

“அண்ணா – ஐயா பின்னுக்குத்தான் திட்டமிருந்தது” என்ற கட்டுரைக்கும் பின்னுக்குத்தான் திட்டமிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக துடுப்பாட்ட வீரனுக்குப் பின்னால் என்ற நிகழ்வையும் தமிழ்ச் சமூகம் அறிந்திருத்தல் வேண்டும். ஆரம்ப காலத்தில் போராளிகள் அண்ணனுடன் இணைந்த போது யாழ்.இந்துக் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் பலர் அதில் இணைந்துகொண்டனர். இக்கால கட்டத்தில் துடுப்பாட்ட வீரரான என்.வித்தியாதரன் கல்லூரி வாழ்வை முடித்து தனது மைத்துனரான சரவணபவனின் உதயன் பத்திரிகையில் விளையாட்டுச் செய்தியாளராக இணைந்தார் .பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் விளையாட்டு செய்திகளை தொகுத்து அளித்தார்.

இக்காலத்தில் அவரது கல்லூரியின் மைந்தர்கள் வீரச்சாவு அடைய அதனை பாடசாலை பழைய மாணவர் சங்கம் பத்திரிகையில் பிரசுரித்தது. மாவீரர்களின் புகைப்படங்களும் போராட்டச் செய்திகளும் வெளிவந்ததால் உதயன் பத்திரிகை பிரபலமடையத்தொடங்கியது. அடுத்த சில வருடங்களில் இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் இயங்கிய  பத்திரிகை ஒன்றின் காரியாலயம் அழிக்கப்பட்டது. அதன் பின் இந்திய அமைதிப்படை மக்கள் மீதான பாரிய படுகொலைகளை மேற்கொண்டது.

பின்னாளில் ஊடகத்துறை பணியாளர்களில் சிலருக்கு ஊடகத்துறை பயிற்சி என்ற போர்வையில் இந்தியாவில் உளவுத்துறையினால் விசேட பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பின்னணியில் உதயன் நாளிதழ் இதயம் கவர்ந்த நாளிதழாக மலர்ந்தது. ஆனால் அது பலரது இதயங்களை எடுத்தது என்பதனை 2009ஆம் ஆண்டிற்கு பிற்பாடே தெரியவந்தது.

தமிழ் மக்களின் நீண்டகால அமைதி இப்பத்திரிகை முகவர்களின் திருட்டினை ஊகித்து அறிய வைத்துள்ளது. இவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்காகவும் பாராளுமன்றம், மாகாணசபை என்று பதவிகளைப் பெறுவதற்காகவும் தமிழினத்தை அடகு வைக்கிறார்கள். அற்ப பணத்திற்காக அபத்தமான காரியத்தில் ஈடுபடும் இம்மனிதர்களின் முகமூடி கிழிக்கப்படல் வேண்டும்.

இலங்கை, இந்திய அரசுகளைக் காப்பாற்றுவதற்காக கூட்டமைப்பு நடந்துபொள்ளும் விதத்தினை தந்திரமாக ஊடகத்தில் கையாளும் இவர்கள் எமது கடந்தகால அரசியல் வாழ்வினையும் விளையாட்டு போல மாற்ற நினைக்கின்றனர். இதனை சக ஊடகவியலாளர்கள் உணரல் வேண்டும். “அண்ணனுக்கு பின்னாலும் ஆட்ட நிர்ணயச் சதி. உதயனுக்குப் பின்னாலும் ஆட்ட நிர்ணயச் சதி”

உதயன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட மேற்படிக் கட்டுரை புலம்பெயர் தமிழ் மக்களின் பார்வைக்காக இங்கு தரப்படுகிறது:-




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *