மன்மோகன் சிங்கின் பதில் எனக்கு நிறைவு தருவதாக இல்லை – ஜெயலலிதா
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ள பதில் திருப்தி அளிப்பதாக இல்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. பேரவையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் குறித்து நிருபர்களுக்கு கருத்து தெவித்தபோதே முதல்வர் ஜெயலலிதா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று ஏற்கனவே 2 முறை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இது தொடர்பாக பிரதமர் எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் எந்தவித உறுதியான நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை.
பிரதமரின் பதில் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இந்த பிரச்சினையில் உறுதியான முடிவை எடுத்து, அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.