Search

வீடியோக்கள் உண்மை… எடுத்தது சிங்கள கேமரா!

”வீடியோக்கள் உண்மை… எடுத்தது சிங்கள கேமரா!” சேனல் 4 காட்டும் கொடூரப் பதிவுகள் -’ஜூனியர்  விகடன்’- மகா.தமிழ்ப் பிரபாகரன்

லகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது சேனல் 4 தொலைக்காட்சி!

நெஞ்சில்ஈரம் உள்ள வர்களைக் கண்ணீர் வடிக்கவும், ரத்தம் சூடானவர்களைக் கொதிக்க வைக்கும் அளவுக்கும் ஈழத்துக் காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது. இப்போது, ஈழத்தில் நடந்த போர்க்குற்றங்களையும் மனிதஉரிமை மீறல்களையும் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த நேரத்திலும், ‘ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம்தான்’ என்பதை ஒப்புக்கொள்வதற்குக்கூட பல நாடுகள் யோசிக்கின்றன என்பதுதான் வேதனை.

வியட்நாம் போர் தாக்குதலில் ஒரு சிறுமி பதறியபடி நிர்வாணமாய் ஓடி வந்த புகைப்படம் வெளியானதற்கே, இந்த உலகம் பதைபதைத்துத் துடித்தெழுந்தது. ஆனால், ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் நிர்வாணக் குவியலாய் லட்சக்கணக்கில் செத்து அழிந்தபோதும்கூட, ‘ஒரு புகைப்படத்துக்காக கண்ணீர் வடித்த உலகச் சமூகம்’ அமைதியாகவே இருக்கிறது.

இலங்கையின் இனப்படுகொலை களுக்கு ஆயிரமாயிரம் சாட்சியங்கள் இருந்தும், ‘தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்று சாயம் பூசியதே தவிர, ‘இது மனிதத்துக்கு எதிரான போர்’, ‘தமிழர் களை அழிக்கும் போர்’ என்று சிறு முணுமுணுப்பும் எழவில்லை. ரசாயனக் குண்டுகளில் கருகிப் பொசுங்கி, பிய்த்து எறியப்பட்ட உடலையும் விடாமல் புணர்ந்து சிரித்து தமிழர்களைத் தின்று தீர்த்தது சிங்கள இனவெறி. மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த இலங் கையின் இனப்படுகொலையும் ஈழத் தமிழர்கள் வெந்து துடித்து அனுபவித்த ரணங்களையும் சொற்களால் வர்ணித்துவிட முடியாது.

உயிர் கொடுத்த சேனல் 4

இறுதிக்கட்டப் போரின் முடிவுக்குப் பிறகு, உலகச் சமூகத்துக்கு பொட்டில் அடித்தது போல், சேனல் 4 தொலைக்காட்சி சில காட்சிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ என்ற காணொளியை வெளியிட்டது. இலங்கைக்கு எதிரான இந்தக் காணொளியைப் பார்த்து, இங்கிலாந்து நாடாளு மன்றம் தொடங்கி நார்வே, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் செனட் வரை அதிர்ந்தன. அந்தக் காணொளி திரையிடப்படாத நாடே இல்லை என்ற அளவுக்கு உலகெங்கும் அதிர்ச்சியை உரு வாக்கியது. இப்போது நீதிக்காகப் போராடும் ஈழத் தமிழர்களுக்கு, பக்கபலமாக இருப்பது இந்தக் காணொளிக் காட்சிகள்தான். இப்போது மீண்டும், ‘இலங்கையின் கொலைக்களங்கள் –  தண்டிக்கப்படாத குற்றங்கள்’ என்ற பெயரில் புதிய காணொளியை சேனல் 4 கடந்த புதன்கிழமை வெளியிட்டது!

அதிர வைத்த ஆவணப் படம்!

கடந்த மார்ச் 11 அன்று ஓர் ஆவணப் படம், மனித உரிமைத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இலங்கைஅரசு பாதுகாப்பான பகுதி என்று அறிவித்த பகுதிகளில் இருந்த அப்பாவி மக்கள் மீது செல் குண்டு தாக்குதல்கள் நடத்தியது முதல், பெண் புலிகள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி இறந்த பிறகும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது வரை அதில் இரு ந்தது. இதையே சேனல் 4 வெளியிட்ட நேரத்தில், ‘அது பொய்யானது, ஜோடிக்கப்பட்டது’ என்று, இலங்கை அரசு சொன்னது. ஆனால், இப்போது காட்டப்பட்ட ஆவணப் படத்தில் சம் பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் என் பதும்  தெளிவாக அடையாளம் காணும் அளவுக்கு இருக்கிறது.

பாதுகாப்பான வளையம் என்று சொல் லப்பட்ட பதுங்கு குழிகள், ஐ.நா. உதவியுடன் அப்பாவி மக்கள் பாதுகாப்புக்காக இலங்கை அரசால் அமைக்கப்பட்டன. அதன் மீதே குண்டுகள் வீசித் தாக்கியுள்ளார்கள். பாதுகாப்பு வளையத்துக்கு வந்த மக்களுக்கு உணவு தரப்படவில்லை. காயம்பட்ட வர்கள் மருந்து இல்லாமல் இறந்து போயிருக் கிறார்கள். புதுமாத்தளன் மருத்துவமனை மீது செல்குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் இந்த ஆவணப் படத்தில் இருக்கின்றன.

புதன்கிழமை காணொளி!

‘அய்யோ! இந்தப் பச்சப் பிள்ளையைக் காப்பாத்த முடியலையே’ என்ற மரணத்தை  விழி முன்னே நிறுத்தும் தாயின் கதறலின் ஊடே சேனல் 4 தொலைக் காட்சியின் புதிய காணொளி கடந்த புதன்கிழமை வெளியானது. சுமார் 53:12  நிமிடங்கள் ஓடும் இந்தக் காணொளிக் காட்சிகளை கல்லம் மெக்ரே இயக்கி உள்ளார்.

”உலக நாடுகள் பலவற்றில் காட்சிப்படுத்தப்பட்டும், உலக சமுதாயமும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கைக்குத் தண்டனை அளிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டன. இத்தகைய தருணத்தில்தான் இந்தக் காட்சிகளை வெளியிடுகிறோம்” என்ற விளக்கத்துடன் தொடர்கிறார் ஜான் ஸ்னோ.

”சேனல் 4 வெளியிட்ட இலங்கைக் கொலைக் களங்கள் வீடியோவைப் பார்த்துவிட்டு என் 28 வயது மகன் கதறி அழுதான். இந்தக் கொடூரத்தைக் கண்டுவிட்டு நான் சிங்களன், இலங்கை பிரஜை என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது என்றான்” என்று, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சொல்வது அடுத்து வருகிறது.

இங்கிலாந்து முன்னாள் வெளியுறவுச் செயலாளர் டேவிட் மில்லிபேன்ட், ”26 ஆண்டு காலமாகப் போராடிய விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறி, பெருந்தொகையான மக்களை இரு சகோதரர்களான கோத்தபயவும் மகிந்தாவும் அழித்து உள்ளனர். அவர் கள் தயாரித்த நல்லிணக்க அறிக்கையில் இந்தக் கொடூரங்களுக்கு யார் காரணம் என்பதைக் கூற மறுத்து விட்டனர்” என்று குற்றம் சாட்டுகிறார்.

கத்தினால் ராணுவம் சுடும்!

2009 ஜனவரி 23 அன்று பொதுமக்களைக் காப்பதற்காக ஐ.நா. சார்பில் பதுங்கு குழிகள் அமைக் கப்பட்டன. ‘பாதுகாப்பு வளையம்’ என்று இலங்கை அரசால் முதலில் சொல்லப்பட்ட உட்டியகட்டுப் பகுதி அருகே பீட்டர் மெக்கே என்ற ஐ.நா. பணியாளர் மேற்பார்வையில் இது அமைக்கப்பட்டது. ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் ஐ.நா-வின் பதுங்கு குழிகள் மீதே எறிகணைகள் விழுந்திட.. இந்தத் தகவலை சரத் பொன்சேகா, கோத்தபய ஆகியோரிடம் பீட்டர் மெக்கே சொல்கிறார். உடனே, பாதுகாப்பு வளைய ங்களுக்கு கொஞ்சம் தள்ளி எறிகணைகளை வீசியிருக்கிறார்கள்.

பாதுகாப்பு வளையத்தில் இருந்து காயங்களுடன் தப்பி வந்த ஆண் ஒருவர், ‘நாங்கள் பட்ட காயங்களுக்கு மருந்து இல்லாமல் கத்திக்கொண்டே கண் சொருகி விழுந்து விடுவோம். அதுதான் எங்களுக்கு வலி நிவாரணி. அடிபட்டவர்கள் கத்திக்கொண்டே இருப்பதைக் கண்டால், இழுத்துப்போட்டு சுட்டுக் கொன்று விடுவார்கள் ராணுவத்தினர்”  என்கிறார் அதே வலியோடு.

பிரபாகரனின் இளைய மகன் படுகொலை!

மே 17-ம் தேதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது அழுத்தமாக இந்தக் காணொளியில் பதிவாகி உள்ளது. பாலச்சந்திரனின் மெய்க்காவலர்கள் ஐந்து பேரும் கண்கள் கட்டப் பட்டு, கைகள் முதுகின் பின் கட்டப்பட்ட நிர்வாண நிலையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். பாலச்சந்திரன் உடம்பில் இரண்டடி முதல் மூன்று அடி தூரத்தில் இருந்து சுடப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் ஐந்து குண்டுகள் பாய்ந்து ள்ளன. இவர், பிரபாகரனின் மகன் என்பதாலேயே இவ்வாறு கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று சேனல் 4 குறிப்பிடுகிறது.

தலைப்பகுதி மோசமாக சிதைக்கப்பட்டு, உடலில் சேறு பூசி, உடைகளை அகற்றிக் காட்டப்படுகிறது புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல். ‘இது பிரபாகரன்தான்’ என்று கருணா உறுதிப்படுத்தியதாக சிங்கள ராணுவம் சொல்கிறது. ஆனால், இது வரை மருத்துவச் சான்றிதழை இந்தியாவுக்குத் தராமல் மறைக்கிறது இலங்கை அரசு. சிங்கள ராணுவத்தினரால் காட்டப்பட்ட அதே காட்சிகள், சேனல் 4 தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டன. ஆனால், இவை உண்மையில் பிரபாகரன்தானா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த தகவலும் சொல்லப்படவில்லை.

ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் இல்லை!

இலங்கையில் போர் நடைபெற்ற போதும், அதன் பின்னரும் ஊடகவியலாளர்கள் நிலை குறித்து இலங்கையின் சுதந்திர ஊடகவியலாளர் பாஷன அபயவர்த்தனே பேசி இருக்கிறார். ”இலங்கையில் ஊடகவியலாளர் யாராக இருந் தாலும் அவர் கொல்லப்படவோ அல்லது நாட்டை விட்டு விரட்டப்படவோ வேண்டும் என்ற நிலையே இப்போதும் தொடர்கிறது. இது வரை, 60 பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டு உள்ளனர். 2005-ம் ஆண்டு முதல் இதுவரை சிங்களர்கள், தமிழர்கள் என்று 26 பத்திரி கையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்” என்று சொல்கிறார்.

இதில் ஆவணப்படுத்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும், படங்களும் தடயவியல் நிபுணர் டென்ரிக் ஃபவுன்டர் மூலமாக ஆராயப்பட்டுள்ளன. ”இந்தக் காட்சிகள் அனைத்தும் உண்மை. இதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை. ஜோடிக்கப்பட்ட காட்சிகளோ, பொய்யானவையோ அல்ல.

சிங்கள ராணுவத்தினர் எடுத்த காட்சிகள்தான் இவை. பிரபாகரனின் மகன் படுகொலை செய்யப்பட்டதில், அவருக்கு உடல் அளவில் எந்தக் கொடுமைகள் செய்யப்பட்டதற்கும் ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், அவர் மனதளவில் கொடுமை படுத்தப்பட்டிருப்பார் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது” என்கிறார்.

இசைப்பிரியாவை சீரழித்த முந்தைய காட்சிகள், பெண் போராளி கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துச் செல்வது, உயிரற்ற போராளிகளைக் குப்பைகளைப் போல் ஆடைகளை அகற்றி டிராக்டரில் தூக்கி வீசும் சிங்களப் படை, உயிரைக் காத்துக்கொள்ள கடலிலும் காடுகளிலும் தஞ்சம் புகுந்து தப்பிக்கும் மக்கள் என்று ரத்தசாட்சிகளாய் சிவக்கிறது திரை.

போர் முடிந்ததும் சிங்களப் படையின் கொண் டாட்டங்கள், இந்திய அரசின் சார்பாக சிவசங்கர மேனன் ராஜபக்ஷேவுடன் நடத்திய சந்திப்புகள் போன்ற காட்சிகளும் வருகின்றன. 2013 காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் நடக்க இருக்கும் சமயத்தில், ’40 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா-வும் உலகச் சமூகமும் மறந்துவிட வேண்டாம்’ என்று, குற்றவாளிகளை அடையாளம் காட்டிய நீதியுடன் இருள்கிறது காட்சிகள்.

என்ன செய்யப்போகிறது இந்தியா?

– மகா.தமிழ்ப் பிரபாகரன்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *