இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவது பற்றி முடிவு செய்வோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தொல்.திருமாவளவன் இதுபற்றி கூறியதாவது:-
ஐ.நா. சபையில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் முன்மொழியப்பட்டு உள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு அந்த தீர்மானத்தில் வலு இல்லை. இலங்கை அதிபர் ராஜபக்சே அரசால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள், தமிழர் பகுதியில் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை என்பதை சுட்டிக் காட்டித்தான் இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டு உள்ளது.
உலக நாடுகள் மத்தியில் தமிழர்களின் உணர்வுகளை கொண்டு செல்வதற்காகவே இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறோம். இந்திய அரசு, பிற நாடுகளின் கொள்கையில் தலையிட மாட்டோம் என்று கூறுகிறது. ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தடை விதித்ததும், சீன அரசுக்கு எதிராக தலாய்லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததும், பாகிஸ்தானுக்கு எதிராக பங்களாதேஷை பிரித்து கொடுத்ததும் வெளிநாட்டு கொள்கைதான். ஆனால் ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிட மாட்டோம் என்பது தமிழர்களை முட்டாள்கள் ஆக்கி அலட்சியம் செய்வது ஆகும்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். ஈழத்தில் உள்ள தமிழ் பெண்களை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி ராணுவத்தின் துணையுடன் 182 இடங்களில் பாலியல் விடுதி நடத்த கட்டாயப்படுத்தி வருகிறார்கள். ஐ.நா.சபை தீர்மானத்தில், தமிழர்களுக்கு எதிரான முடிவை மத்திய அரசு எடுத்தால், காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பதை மறுபரிசீலனை செய்வோம். கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து முடிவு செய்வோம்.
விடுதலை புலிகளிடம் தமிழக எம்.பி.க்கள் பணம் பெற்றுக் கொண்டு பேசுவதாக இலங்கை தூதர் கூறியது கடும் கண்டனத்துக்கு உரியது. அவர் வருத்தம் தெரிவித்தாலும் அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா. தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி தி.மு.க. அ.தி.மு.க. என அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.