அரசாங்க ரகசியங்கள் அடங்கிய ரெட் பாக்ஸ் எனப்படும் சிகப்பு பெட்டியை ரயிலில் தவறவிட்டுள்ளார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன். பிரிட்டன் அரசாங்க ரகசியங்கள் அனைத்தும் ரெட் பாக்ஸ் எனப்படும் சிகப்பு பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படும்.
பிரதமரிடம் இருக்கும் இந்த பெட்டியில் முக்கிய ஆவணங்கள், உடன்படிக்கைகள், தற்கால நிகழ்வுகள், எதிர்காலத்தில் அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும்.
சமீபத்தில் உறவினரின் திருமணத்திற்கு சென்ற பிரதமர், தன்னுடனேயே ரெட் பாக்சையும் எடுத்துச் சென்றார்.
அப்போது ரயிலில் பயணம் செய்த போது, மறதியில் அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டார்.
அதே பெட்டியில் பயணம் செய்த பயணி, ரெட் பாக்சை எடுத்து பொலிசாரிடம் ஒப்படைத்தார்.
ரயிலில் இருந்த பாக்சை, பத்திரிக்கை நிருபர்கள் புகைப்படம் எடுத்து முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரமாக வைத்திருக்க வேண்டிய ரெட் பாக்சை பிரதமர் கமரூன் கவனக் குறைவாக ரயிலில் தவறவிட்டதும், அதை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கூட கவனிக்காததும் மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.
மேலும் அந்த பாக்சில் சிரியா குறித்த தகவல்கள் இருந்ததாகவும், இதனை எடுத்த நபர் அத்தகவல்களை படித்தாரா என்று அறிவதற்காக விசாரணை நடப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.