Search

முட்டுக்கட்டை போடுகிறது இந்தியாவின் திருத்தம்: நாம் தமிழர் கட்சி!

ஐ.நா.தீர்மானம்: நியாயமான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது இந்தியாவின் திருத்தம்: நாம் தமிழர் கட்சி

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் மெய்பிக்க வாய்ப்பளிக்கும் ஒரு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான இரண்டு திருத்தங்களைச் செய்துள்ள இந்திய அரசு, அதன் மூலம் நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டையை உருவாக்கியுள்ளது.

அமெரிக்கா அறிமுகம் செய்த வரைவுத் தீர்மானத்தின் மிக முக்கியமான மூன்றாவது பிரிவில், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில்நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருந்தது. இதனை, இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தியும், அதன் ஒப்புதலைப் பெற்றும் ஐ.நா. மனித உரிமை மன்றம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா திருத்தம் செய்துள்ளது. இது கொலைகாரனின் ஆலோசனையுடனும், ஒப்புதலுடனும் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

 

இது மட்டுமின்றி, விசாரணைத் தொடர்பாகவும், அங்கு போரினால் அனைத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு செய்யப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் ஆராய வரும் ஐ.நா. குழுவினர் இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அந்நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தி, ஏற்றுக்கொள்ளச் செய்துள்ளது. இது விசாரணை சரியான திசையில் முன்னெடுக்காமல் தடுக்கும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நிகழ்ந்த படுகொலைகள் குறித்து விசாரணை நடத்துவது தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த மார்சுகி தாருஸ்மான் விசாரணைக் குழுவை நாட்டிற்கு அனுமதிக்க மறுத்த இலங்கை அரசை, மீண்டும் அதேபோன்றதொரு நடவடிக்கையை ஐ.நா. மனித உரிமை அமைப்பாளர்களுக்கு எதிராகவும் செய்ய தூண்டுகிற வேலையை இந்தியா செய்துள்ளது.

 

இலங்கைக்கு எதிராக பன்னாட்டு மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு கட்டத்திலும் இலங்கையின் இறையாண்மையைப் பற்றிப் பேசியே அதனை தட்டிகழித்த இந்திய அரசு, இப்போதும் அந்நாட்டின் இறையாண்மையை காக்க வேண்டும் என்று கூறி மேற்கண்ட தடைகளை உருவாக்கியுள்ளது. இரண்டரை ஆண்டுக்காலப் போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசை இறையாண்மைக் காரணம் காட்டி காப்பாற்ற முயல்வது ஈழத் தமிழினத்திற்குச் செய்யும் அப்பட்டமான துரோகமாகும்.
இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. அவையில் கொண்டு வரும் தீர்மானத்தை நிறைவேற்ற வாக்களித்துவிட்டு, அதே நேரத்தில் அந்தத் தீர்மானம் பலமான நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான திருத்தங்களை இந்திய அரசு செய்துள்ளது. இதுநாள் வரை தமிழனுக்கு எதிராகச் செயல்பட்டுக் கெடுத்த இந்திய அரசு, இப்போது ஆதரவாக நின்று கெடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தீர்மானமே மிக மென்மையானது. அதனையும் முடக்கும் வேலையை இந்த திருத்தங்களின் மூலம் இந்திய அரசு செய்துள்ளது. இந்திய மத்திய காங்கிரஸ் அரசின் இந்த இரட்டை முகத்தை தமிழினம் ஆழமாக புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும்.
ஈழத் தமிழினத்தை அழித்தொழித்த இலங்கை அரசின் போருக்கு அனைத்து உதவிகளையும் செய்து துணை நின்ற மத்திய காங்கிரஸ் அரசு, அந்தப் படுகொலையில் தன் பங்கை மறைக்கவே விசாரணைக்கு இப்படிப்பட்ட முட்டுக்கட்டைகளை போட்டிருக்கிறது. இதையும் தாண்டி, தீர்மானத்தை செயல்படுத்தி, வஞ்சனையால் வீழ்த்தப்பட்ட தமிழினத்திற்கு நியாயம் கிட்ட, புத்திப்பூர்வமாக தமிழர்கள் ஒன்றிணைந்து போராடுவோம்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *