TNAயின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகள் அடித்து நொருக்கப்பட்டன

TNAயின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகள் அடித்து நொருக்கப்பட்டன

வடமராட்சி கிழக்கின் உடுத்துறையில் இடம்பெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகள் அவ்விடத்திற்கு சென்ற இனம்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இன்றிரவு இச்சம்பவம் நடந்துள்ளது.

இன்று மாலை 5.30 மணியளவில் வடமராட்சி உடுத்துறை பாரதி சனசமூகநிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திலே இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த சமூக பிரதிநிதிகள் குழுவொன்று படைப் புலனாய்வாளர்கள் மற்றும் ஈபிடிபியினரது அச்சுறுத்தல்களையடுத்து ஏற்பாடுகளை கைவிட்டிருந்தது.

இதையடுத்து மாற்று ஏற்பாடாக வடமராட்சி உடுத்துறை பாரதி சனசமூகநிலையத்திற்கு முன்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக வேட்பாளர் சுகிர்தன் தெரிவித்தார்.

தேர்தல் கூட்டம் முடிவடைந்த நிலையில் அங்கு சென்ற இனம் தெரியாத நபர்கள், கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை அடித்து நொருக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வேட்பாளர் எஸ்.சுகிர்தன் மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே கொடிகாமத்தில் பிரச்சார நடவடிக்கைகளினில் ஈடுபட்டிருந்த சுகிர்தனின் ஆட்களே பொலிஸாரால் சிறைப்பிடிக்கப்பட்ருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்மராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மோசமாகத் தாக்கப்பட்டனர்.

தென்மராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளபட்ட மோசமான தாக்குதலில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வெள்ளை வாகனத்தில் சென்ற குழுவொன்று சிங்களத்தில் கத்தியவாறு இரும்புக் கம்பிகளுடன் ஓடிச் சென்று வாகனத்தை இடைமறித்து தாக்கியதாகவும் தாங்கள் பாதுகாப்பு தேடி ஒடியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு உள்ளதாகவும் காயடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஐந்து மணியளவில் நாவற்குழியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டவர்கள் மீதே இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா.கிஸோர் (வயது-24), மற்றும் நுணாவில் கிழக்கைச் சேர்ந்த ஆர்.றஜிந்தன் (வயது-19) ஆகியோரே காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஏழு பேர் டெமோ வாகனம் ஒன்றில் சென்று நேற்று பிற்பகல் வேளை தனங்களப்பில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இவர்கள் நாவற்குழியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தச்சன்தோப்பு சந்தியிலுள்ள இராணுவத்தினர் தங்களை மறித்து எங்கே போகின்றீhகள் என்று விசாரித்தாகவும் தாங்கள் நாவற்குழி சந்திக்கு செல்கின்றோம் என்று கூறியபோது நாவற்குழி சந்திக்கு செல்வீர்களா என்று பல தடவைகள் கேட்டதாகவும் மேற்படி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படையினர் இவ்வாறு திருப்பத் திருப்பக் கேட்டமையானது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் தாங்கள் அச்சமடைந்து நாவற்குழி சந்திக்கு மாற்றுப் பாதையூடாக செல்ல முற்பட்டதாகவும் இதன்போது திடீரென்று எங்கிருந்தோ சென்ற வெள்ளை நிற வாகனமொன்று தங்களைப் பின்தொடர்ந்ததாகவும் இவர்கள் தெரிவித்தனர். குறித்த வாகனத்தைக் கண்டதும் தாங்கள் அச்சமடைந்து தமது வாகனத்தை மீண்டும் வந்த பாதையாகிய கேரதீவு வீதிக்கு திருப்பியதாக தெரிவித்தனர். “அந்த வாகனம் எங்கள் வாகனத்தை பின்தொடர்ந்தது. நாங்கள் நாவற்குழி மகா வித்தியாலயத்திற்கு அண்மையில் எமது வாகனத்தை நிறுத்தியபோது அந்த வாகனம் எங்களைக் கடந்து சென்றது. அதனால் நாங்கள் மீண்டும் நாவற்குழியை நோக்கிப் பயணித்த போது சடுதியான வேகத்தில் எங்களைத் துரத்தி வந்த அந்த வாகனம் எங்கள் வானத்திற்கு குறுக்கே நிறுத்தப்பட்டது.

அந்த வாகனத்தில் இருந்து இறங்கி வந்த எட்டு வரையான இளைஞர்கள் சிங்களத்தில் கத்தியவாறு எமது வாகனத்தை நோக்கி ஒடி வந்து இரும்புக் கம்பிகளால் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் நாங்கள் ஓடினோம். ஆனாலும் இருவர் காயமடைந்தனர். பின்னர் ஒருவாறு எமது சாரதி புத்திசாதுரியமாக செயற்பட்டு வாகத்தை திருப்பிக்கொண்டு ஓடியதால் நாங்கள் தப்பித்தோம்” என்று காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தெரிவித்தனர். தங்களைத் தாக்கிய அனைவரும் கட்டைக் காற்சட்டையும் ரீ-சேர்ட் அணிந்திருந்தாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.