இலங்கையின் இறுதிப் போரில் யுத்த மீறல்கள் இரு தரப்பாலும் மீறப்பட்டது! பக்கச்சார்பற்ற நீதியான விசாரணை தேவை என சர்வதேசத்திடம் கோரியுள்ளோம்: சுமந்திரன் எம்.பி
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் பேரில் இருதரப்பாலும் சர்வதேச மனித உரிமைச்சட்டங்கள், மனிதாபழமான சட்டங்கள் மீறப்பட்டன. இது குறித்து நீதியான விசாரணை தேவை என சர்வதேசத்திடம் போரியுள்ளோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாவட்டதில் போட்டியிடும் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கத்தை ஆதரித்து வவுனியா சாஸ்திரிகூழாங்குளத்தில் இடமபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலை கண்காணிப்பதற்கு வந்திருக்கின்ற தேர்தல் கண்காணிப்புக் குழுக்களில் ஒன்று தென்னாசியப் பிரதேசத்தில் இருந்து 20 பேர் அடங்கிய குழு வந்திருகின்றது. மற்றைய குழு பொதுநலவாய நாடுகளில் இருந்து முன்னாள் கென்யா நாட்டு உப ஜனாதிபதி தலைமையில் ஜந்து பேர் அடங்கிய குழு வந்திருகின்றது. எந்தவொரு நாட்டிலுயம் ஒரு தேசிய மட்டத்திலான தேர்தல் நடைபெறுகின்ற போது தான் சர்வதே கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படுவது சகஜம்.
ஆனால் இந்த வழக்கத்திற்கு மாறாக மூன்று மாகாணசபைத் தேர்தல்கள் ஒரே நாளிலே நிகழ்கின்ற வேளையிலே இரண்டைத் தவிர்த்து வடமாகாணசபைத் தேர்தலுக்கு இரண்டு கண்காணிப்பு குழுக்கள் வந்திருக்கின்றன. ஓரு உள்ளூர் தேர்தல் ஆகிய மாகாணசபைத் தேர்தலுக்கு சர்வதேகண்காணிப்பு குழு வருவதன் அவசியம் என்ன?
சர்வதேசத்தின் கண்ணோட்டம் எப்பொழுதும் எங்கள் மீது இருந்து கொண்டு இருக்க மாட்டாது. உலகத்திலே பல இடங்களில் பல பிரச்சனைகள் உண்டு. ஆனால் இந்த வேளையிலே உலக நாடுகள் எங்கள் பிரச்சனையை பார்த்துக் கொண்டிருக்கின்றது.
இதனை நாம் எங்களுக்காக பயன்படுத்த வேண்டும். சர்வதேசத்தின் கவனம் இலங்கை மீது வந்திருக்கின்றது. ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் இரண்டு ஆண்டுகள் இலங்கைக்கு எதிராக அதாவது 2012,2013 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே மனித உரிமைப் பேரவை 2009 மே மாதத்தில் ஒரு விசேட கூட்டத்திலே இலங்கை அரசாங்கம் பயங்காரவாத யுத்தத்தினை முடித்ததாக இலங்கை அரசாங்கத்தை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
அதே சபை தான் இன்றைக்கு மூன்று நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தை கண்டித்து பல விடயங்களை மேற்கோள் காட்டி தன்னுடைய எதிர்பார்ப்புக்களை முன்வைத்து அடுத்தடுத்து இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த மாத இறுதியிலே நவநீதம்பிள்ளை அம்மையார் ஒரு வாய் மூலமான அறிக்கையை பேரவைக்கு வழங்க இருக்கிறார்.
இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு முன்னராக அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டிலே தெரிவித்த பல விடயங்களை நாங்கள் கவனிப்போமாக இருந்தால் அவர் வழங்க இருக்கின்ற வாய் மூலமான அறிக்கை எப்படியானதாக இருக்கும் என்பதை எங்களால் அனுமானிக்க முடியும். அதைத் தொடர்ந்து வருகிற மார்ச் மாதம் ஒரு முழுமையான எழுத்து மூலமான அறிக்கை இலங்கை சம்மந்தமாக சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.
அந்த வேளையிலே சர்வதேச சமூகம் இலங்கை சம்மந்தமாக இல்கையிலே வாழ்கின்ற தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சனை சம்மந்தமாக ஒரு முடிவான தீர்வொன்றை எடுக்கக் கூடிய சாத்தியக் கூறு இப்பொழுது கனிந்து வந்து கொண்டிருக்கிறது.
ஆகையினால் தான் இந்த தேர்தல் முக்கியமானது என நாங்கள் சொல்லுகிறோம். இதனால் தான் இந்த தேர்தல் முக்கியமானது என கருதி சர்வதேச சமூகம் இந்த தேர்தல் நீதியானதாகவும் நியாயமானதாகவும் நடைபெறவேண்டும் என இத்தனை பேர் கொண்ட சர்வதேச கண்காணிப்பு குழுவை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
இந்த தேர்தலிலே தமிழ் மக்கள் எப்படியாக வாக்களிக்க போகிறார்கள். தமிழ் மக்களது நிலைப்பாடு என்ன? என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச அரங்கிலே ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில விடயங்கள் குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன.
இலங்கையிலே நடைபெற்ற போர் அந்த போரின் இறுதிக்கட்டத்திலே நடந்ததாக சொல்லப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள் நடந்தனவா? அதற்கு யார் பொறுப்பு கூற வேண்டும். என்பதைப் பற்றி ஒரு சுயாதீனமான நம்பகம் வாய்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். என்ற தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
நவநீதம்பிள்ளை அம்மையார் கடந்த மார்ச் மாதம் மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பித்த போது அந்த விசாரணை ஒரு சர்வதேச விசாரணையாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
நாங்கள் திரும்ப திரும்ப சொல்லுகிறோம். ஒரு பக்கச் சார்பற்ற விசாரணை நடைபெற வேண்டுமாகவிருந்தால் அது நிச்சயமாக சர்வதேச விசாரணையாக மட்டும் தான் இருக்க முடியும். ஏனென்றால் போரின் இறுதிக்கட்டத்திலே இழைக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற இந்த மீறல்கள் இரு சாராரினாலும் இழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதிலே ஒரு சாரார் இலங்கை அரசாங்கம்.
ஆகையினாலே குற்றம் சாட்டப்பட்ட ஒரு சாரார் தாங்களே அந்த விசாரணையை நடத்த முடியுமா? முடியாது. அது பக்கச் சார்பற்ற விசாரணையாக ஒருபோதும் இருக்க முடியாது. ஆகையினால் தான் நாங்கள் சொல்லுகிறோம். நிபுணர் குழுவொன்றை ஜக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நியமித்து அவர்களுடைய சிபார்சின் படி விசாரணை இடம்பெறவேண்டும்.
இருதரப்பினரும் சர்வதேச மனித உரிமைச்சட்டங்களையும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களையும் மீறினார்கள். அதற்கான சாட்சியங்கள் உண்டு. அவர்களிடம் விசாரித்து அது ஒரு நீதியான சுயாதீனமான விசாரணையாக இருக்க வேண்டுமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் நடத்துகிற விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. அது சர்வதேச விசாரணையாக இருக்க வேண்டும்.
இதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டு வருகிறோம். அப்படியான விசாரணை பொறிமுறையொன்று அமைக்கப்படுவதற்கான எல்லா சத்தியக் கூறும் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெற வசதி ஒன்று ஏற்பட்டுள்ளது.
அப்படியான ஒரு நிலைமைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்படுகின்ற போது பொறுப்பு கூற வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்தின் மேல் சுமத்தப்படுகின்றது. அதிலே இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூற முடியாது திக்கி திணறுகிற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்ற போது போரின் இறுதிக்கட்டத்திலே செய்த அட்டுழியங்களுக்காக மட்டுமல்ல பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்து வந்திருகிற கொடுமைகளுக்கும் அவர்கள் பொறுப்பு கூற வேண்டிய ஒரு கடப்பாடு ஏற்பட்டிருகின்றது.
தமிழ் மக்கள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை பல வருடங்களாக ஜனநாயக வழியிலே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிற போதும் சர்வதேச சட்டத்திலே இருக்கிற உரிமையை அவர்கள் ஜனநாயக வழியிலே திரும்ப திரும்ப எடுத்துரைத்துக் கொண்டிருக்கிற போதும் அதை கருத்தில் கொள்ளாமல் தங்களுடைய பெரும்பான்மை என்கின்ற பாரிய எண்ணிக்கையை வைத்துக் கொண்டு ஒரு பேரினவாத அரசாங்கமாக இத்தனை ஆண்டுகளாக எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கின்ற ஒரே ஒரு காரணத்திற்காகன எங்களை அடக்கி ஒடுக்கி அடிமைகளாக்கி நாட்டை விட்டு துரத்தி நாட்டுக்குள்ளேயே எங்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்தக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்திற்கு திக்கி திணறுகின்ற சூழ்நிலை வந்து கொண்டிருகிறது.
அதனை அவர்கள் எதிர் நோக்ககின்ற போது தமிழ் மக்களுக்கு கொடுத்திருக்க வேண்டிய நியாயமான உரிமைகளை கொடுக்காமல் இத்தனை ஆண்டுகள் மறுத்ததிற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டிய நேரம் கடப்பாடு நெருங்கி வந்திருகிறது.
இந்த நிலையில் தமிழ் மக்களது நிலைப்பாடு என்ன என்பதை சர்வதேசம் வினவுவது முக்கியமானது. நாங்கள் எங்கள் மக்கள் முன்னால் ஒரு கொள்கையை முன்வைத்திருகின்றோம். எங்களுடைய தேர்தல் அறிக்கையில் 2010 ஆண்டு பொதுத் தேர்தலில் நீங்கள் கொடுத்த ஆணையை காட்டியிருகிறோம். 2010 மட்டுமல்ல தொடர்ச்சியாக இது தான் எங்களது அரசியல் அபிலாசை என ஜனநாயக ரீதியிலே எடுத்தியம்புகின்ற ஒன்று. தனித் தேசிய இனமாக இந்த நாட்டிலே ஒன்று பட்டு வாழ்ந்து கொண்டிருகிற நாங்கள் அப்படியான ஒரு இனத்திற்குரிய சுய நிர்ணய உரிமையை நிலைநிறுத்துவதற்கு இப்படியான ஒரு அரசியல் நிலைப்பாட்டினை நாங்கள் கொண்டிருகிறோம்.
இவ்வாறு நாம் கொண்டிருப்பதற்கு சர்வதேச சட்டத்திலே இடம்முண்டு. என நாம் எடுத்துச் சொல்லுகின்ற போது அதை வழங்க வேண்டிய கடமை இலங்கை ஆட்சியாளர்களுக்கு உண்டு என்பதை நாங்கள் எங்களது கொள்கையாக முன்வைத்திருக்கிறோம்.
ஆகையினால் தான் நாங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டவுடனே இலங்கை அரசாங்கம் பதறத் தொடங்கிவிட்டது. அடுத்த நாளே பல பல வியாக்கியானங்கள், விமர்சனங்கள் வந்தது. புலி கேட்டதை கேட்கிறார்கள். அது செய்கிறார்கள். இது செய் செய்கிறார்கள். எனக் கூறி எங்களுடைய தேர்தல் அறிக்கையை நோக்குகிறார்கள்.
ஏனென்றால் 21ம் திகதி தேர்தலிலே நீங்கள் வாக்களித்து மிகப் பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றி பெறுகிற போது எங்களுடைய இந்த அரசியல் அபிலாசைகளுக்கு எங்களது மக்களின் பூரண ஆதரவு இருக்கின்றது என்பதை காட்டுகின்ற போது எங்களுக்கு சாதகத்தன்மை வரும் என எண்ணி இந்த அரசியல் விஞ்ஞாபனம் கபடத்தன்மை வாய்ந்தது என இப்போதே விமர்சிக்கத் தொட்ங்கிவிட்டார்கள்.
எங்களுடைய அரசியல் கொள்கை சர்வதேச சட்டத்திற்கு புறம்பானது இல்லை. ஒரு மக்களுக்கு தங்களை தாங்களே ஆளக் கூடிய சூழ்நிலை உள்நாட்டுக்குள்ளேயே ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அது அவர்களுடைய உரித்து. அவ்வாறு கொடுக்கப்படாவிட்டால் வேறு வகையான வழி வகைகள் சர்வதேச சட்டத்திலே உண்டு.
ஆனால் தற்போது நாங்கள் சர்வதேச சமூகத்திடம் கேட்பது என்ன? ஒரு நாட்டுக்குள்ளேயே எங்களது உரிமையை நீங்கள் பெற்றுத் தாருங்கள். அது முடியாவிட்டால் நாங்கள் அடுத்தபடிக்கு செல்லுவோம். ஆனால் அடுத்தப்படிக்கு முன்னதாக இப்பொழுது இந்த விவகாரத்தை சர்வதேச சமூகம் கையிலே எடுத்து வைத்துக் கொண்டிருகிறது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக விசாரணை நடத்த தயாராகிக் கொண்டிருகிறது. தமிழ் மக்களது நீண்டகால அரசியல் பிரச்சனை நீதியாக தீர்க்கனப்பட வேண்டும் என சர்வதேசம் உறுதியாக எண்ணுகிறது.
இதனை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது மட்டுமல்ல அதனை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்கள் ஒவ்வொருவரினதும் தோளின் மீது சுமத்தப்பட்டுள்ளது. அது உங்களது தார்மீக பொறுப்பு. இதனால் தான் நாங்கள் உங்களிடத்தில் உரிமையோடு கேட்கிறோம். நாம் வந்து கெஞ்சிக் கேட்கவில்லை. தார் போட்டு தந்தோம். இதைத் தாறம். அதைத் தாறாம் என வெற்று வாக்குறுதிகளை நாம் தரவில்லை. உங்களுடைய உரித்துக்காக நீங்கள் எழுந்து நில்லுங்கள் என்று சவாலாக உங்களிடம் கேட்கின்றோம்.
நீங்கள் வாக்களிக்க வேண்டியது உங்களுக்கு நீங்கள் செய்யும் கடமையே தவிர ஒரு அரசியல் கட்சிக்காக நீங்கள் செய்யும் கடமை இல்லை. இதனால் தான் இந்த தேர்தல் முக்கியம் பெறுகிறது. சர்வதேச சமூகத்திற்கு இலங்கை தமிழ் மக்கள் எதை சொல்லப் போகிறார்கள் என்பதை எல்லோரும் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நீங்கள் ஒற்றுமையாக ஒன்று பட்டு பதில் அளிக்க வேண்டியள தேவை உள்ளது. அதனை 21ம் திகதி உங்கள் வாக்குகளால் வெளிப்படுத்துங்கள் எனத் தெரிவித்தார்.