செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாகப் பரபரப்புப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக தலை வரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், திமுக எம்.பி., கனிமொழி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து இப்புகார் தொடர்பாக காவல்துறை இணை ஆணையர் விசாரணையைத் துவக்கி இருப்பதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதனால் திமுக வட்டா ரங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. “கடந்த திமுக ஆட்சியின்போது 2010ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டிற்கு ரூ.380 கோடி செலவு செய்ததாக அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். பின்னர் சட்டப்பேரவையில் செம்மொழி மாநாடு சம்பந்தமாக விவாதம் நடந்த போதும் ரூ.380 கோடி செலவு செய்ததாக அறிவிக் கப்பட்டது.
“இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செம்மொழி மாநாட்டிற்கான செலவுத் தொகை எவ்வளவு என்று கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பம் செய்தேன். இதற்குப் பதில் அளித்த தமிழக அரசு, செம்மொழி மாநாட்டிற்கு ரூ.150 கோடி செலவு செய்ததாக கூறியது. அதேபோல 2010-2011ம் ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையில் செம் மொழி மாநாட்டிற்கு ரூ.160 கோடி செலவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“இதற்கு மாறாக, தமிழ் வளர்ச்சித் துறையின் செயலர் அனுப்பிய பதிலில், மாநாட்டுக்காக, 262 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட் டது. மூன்று பேரும், மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பணத்துக்கு, இவர்கள்தான் பொறுப்பு. பணம் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. எனவே, செம்மொழி மாநாட்டில் குறைந்தது ரூ.200 கோடி வரை ஊழல் நடந்திருப்பது தெரிய வந்தது,” என்று ரமேஷ்பாபு தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பணம் இஷ்டத்திற்கு செலவிடப்பட்டது ஆச்சரியமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், மாநாடு செலவு தொடர்பாக அப்போதைய தலைமைச் செயலர் வெளியிட்ட அறிக்கையை தன்னால் ஏற்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.