கிளை பலமானது என்று பார்த்து எந்த பறவையும் அமர்வதில்லை. எந்த நேரத்தில் கிளை முறிந்தாலும் பறக்க திடமான சிறகுகள் தன்னிடம் உள்ளன என்பதே பறவையின் பலம். அதுவே எமது பலமாகவும் இருக்கட்டும்.
கூட்டமைப்புக்கு வாக்களிப்போம். சிங்கள தேசத்தின் தேசிய அரசியலை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை காட்டுவதற்காகவேனும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களித்தே ஆகவேண்டும். வேறுவழி எதுவுமே இல்லை. இருப்பதில் இப்போதைக்கு இதுவே சிறந்தது. மகிந்தர் இந்த தேர்தலை நடாத்துவது ஒன்றும் தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை ஏற்றுக்கொண்டு அல்ல. அவருக்கு இறுகிக்கொண்டே வரும் சர்வதேசத்து அழுத்தங்களில் இருந்து தற்காலிகமாக ஓரளவுக்கு தன்னை சுதாகரித்துக் கொள்ளவே என்பது சிறுகுழந்தைக்கும் தெரிந்த பெரிய உண்மையாகும்.
மேலும் இலங்கைத்தீவினில் ஜனநாயக உரிமைகள் செழித்தோங்குவதாகவும், மாதம் மும்மாரி தேர்தல் பொழிவதாகவும் வெளிஉலகுக்கு காட்டுவதன் மூலம் பொதுநலவாய தலைமையில் எந்தவித எதிர்ப்புகளும் முணுமணுப்புகளும் இன்றி ஏறி அமர்ந்துவிட்டால் இனப்படுகொலை சர்வதேச விசாரணை என்பனவற்றை தூசி போல உதறிவிடலாம் என்பதனை கணித்துவைத்தே மகிந்தர் இந்த முறை வடமாகாணதேர்தல் என்ற ரதத்தில் உலாவுகிறார். இன்னும் நாற்பத்தி எட்டே மணித்தியாலத்துக்கும் குறைவாகவே உள்ளது வாக்களிப்புக்கு. இந்த தேர்தலும் இதன் ஊடாக நிர்வகிக்கப்பட போகும் வடமாகாணசபை என்ற சிங்கள தேசத்தின் ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்ட ஒரு நிர்வாக அலகும் எந்த வகையிலும் தமிழர்களுக்கு எள்ளளவு நன்மையையும் சுபீட்சத்தையும் எல்லாவற்றையும்விட உரிமைகளையும் பெற்றுதந்துவிடும் என்று யாரும் கற்பனைகளில் மிதந்துவிடவேண்டாம். (கனவு கலையப்போவது நிச்சயம்) ஆனாலும் எமக்கு முக்கியமான ஒன்றாக இந்த தேர்தல் புகுத்தப்பட்டள்ளது.
இந்த தேர்தலால் எமக்கு ஆகப்போவது எதுவுமே இல்லை. ஆனால் இந்த தேர்தலில் கூட்டமைப்பு பெரு வெற்றி அடையாதுவிட்டால் அது எமது ஆக்கிரமிப்பாளனான சிங்கள தேசத்துக்கு பெரு வாய்ப்பாக அமைந்துவிடும். மகிந்த அரசு கிடைக்கும் ஒரு தருணத்துக்காக காத்திருக்கின்றது. தமிழர்கள் சிங்கள தேசத்தின் ஆட்சியை ஏற்றுவிட்டார்கள் என்று காட்டுவதற்காக மகிந்தர் காத்திருக்கிறார். (மகிந்தருக்கு மட்டுமல்ல அனைத்து சிங்கள கட்சிகளுக்கும் இதுவே எண்ணம்). இந்த நிலையில் நாம் இதற்கு எதிரான எமது வாக்குகளை பாவித்து கூட்டமைப்புக்கு வாக்களித்து ஆகவேண்டிய ஒரு வரலாற்று இடம் இப்போது.விடுதலை என்பது மிகமுக்கியமானது. மற்ற மனிதர்கள்போல நாமும் வாழ நினைக்கும் அந்த உந்துதல்தான் விடுதலைப்போராட்டமாகின்றது. அதற்காக பயணிக்கவேண்டும். நிச்சயமாக.
ஆனால் பயணம் தொடர்வதற்கோ தொடங்குவதற்கோ முன்னர் நாம் எங்கே நிற்கின்றோம் என்பதை புரிந்துகொள்ளுதல் மிகமிகமிக அவசியம். நாம் இப்போது எங்கே நிற்கின்றோம்…….. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மகத்தான தியாகங்களுடனும், ஈகங்களுடனும், அர்ப்பணிப்புகளுடனும் அதி உச்சமான வீரத்துடனும் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்திய வல்லாதிக்கத்தின் துணையுடனும் சர்வதேசத்தின் அனுசரணையுடனும் சிதைக்கப்பட்டு மௌனமாக்கப்பட்ட பின்னர் சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக எந்தவொரு எதிர்ப்பையும் வெளிக்காட்டுவதற்கு வலுவற்ற ஒரு இனமாக நாம் இப்போது இருக்கின்றோம்.
சுற்றிலும் சிங்கள ராணுவ பிரசன்னம், எங்கெங்கு காணினும் சிங்கள புலனாய்வு வலைப் பின்னல் என்று எம் மக்களை சுற்றி இருக்கும்போது எதிர்ப்பு காட்டுவதற்கான முதற்குரல் எழும்புவதே நான்கு வருடங்களாகியும் இன்னும் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. இதுவே இன்று நாம் அனைவரும் நிற்கும் இடம். எமக்கான ஒரே அமைப்பாக எமக்காக தமது உயிர்களை ஈகம்செய்து வளர்ந்த ஒரு பெரும் மக்கள் அமைப்பாக தழைத்துநின்ற இயக்கம் மௌனமாகிய பின்னர் எங்கும் இருள் சூழ்ந்த பொழுதே இன்றுவரை தொடர்கிறது. ஆனாலும் நாம் இருக்கின்ற நிலைமைகளுக்கேற்ப எமது பயணத்தை தொடர்ந்தே ஆகவேண்டும். பலச் சமனிலையை சிங்களத்துடன் ஒப்புநோக்கி ராஜதந்திரம் செய்யும் நிலையில் நாம் இல்லை இப்போதைக்கு.
சிங்கள தேசம் பலத்தை பிரயோகித்து செய்யும் ஆக்கிரமிப்புகளை பலம் மூலமே எதிர்க்கும் ஆற்றலும் இல்லை இப்போதைக்கு. ஆனாலும் சர்வதேச அரங்கு என்ற ஒரு பாதை உள்ளது. எமக்கு தெரிகின்றது. எம் மக்களின் மீதான இனப்படுகொலை நடைபெறும்போது கண்மூடி பாவனை செய்துகொண்டு மகிந்தருக்கு துணைநின்றது இதே சர்சதேசம்தான் என்று. இன்றுவரை சிங்களதேசத்துடன் ராணு ஒத்திகைகளிலும், ராணுவ தளவாட விநியோகங்களிலும் கூடிக்களிப்பது இந்த சர்வதேசமே என்றும் எமக்கு தெளிவாக தெரிகின்றது.ஆனாலும் வேறு ஏதெனும் தெரிவு இருக்கிறதா எம்முன். சர்வதேசமே இப்போது எமக்கான பாதைகளை வரையறுக்கிறது. வரிக்கிறது. ஆனால் எமக்கான பாதையாக இப்போதெல்லாம் சர்வதேசமே சில பாதைக் குறிப்புகளையும்கூட வழங்குகின்றது. பாதை இதுவென்று அதுவே வழிகாட்டவும் செய்கின்றது. இப்போதைக்கு அதில் பயணம்செய்தே ஆக வேண்டிய கட்டாயம் நமக்கெல்லாம்.
இந்த வடமாகாணசபை தேர்தலும் சர்வதேசத்துக்கு ‘நாம் சிங்களதேசத்துடன் பலவந்தமாக பிணைக்கபட்டுள்ளோம். ஆனால் சிங்கள தேசத்தின் அரசியல்கட்சிகள் எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்கள் ஒவ்வொருவரினது கைகளிலும் தமிழின அழிப்பின் குருதிகறைகள் இருக்கின்றன’ என்பதை வெளிக்காட்டுவதற்காக கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும். இது உக்கிப்போன உளுத்துப்போன கொப்பு என்று இந்த மாகாணசபை தெரிகிறது. முறிந்துவிடும்.ஆனாலும் எமது தாயத்துக்காக ஒவ்வொரு களங்களிலும் தம்மால் முடிந்ததையும்விட அதற்கும் அதிகமாகவே, மானுடம் இதுவரை அறிந்திராத தியாகங்களை எல்லாம் புரிந்த தேசத்தின் புதல்வர்களின் அர்ப்பணம் என்ற பலம் எமது சிறகுகள் ஆகட்டும். வாக்களிப்போம். உலகுக்கு காட்டுவதற்காக. இதில் ஏமாற்றத்தை சந்தித்தால் எழுந்து பறப்பதற்கு எமது சிறகுகளில் பலம் உள்ளது. எனவே கூட்டமைப்புக்கு வாக்களிப்போம்.
ச.ச.முத்து !