“என் பாசத்திற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கம்” அனந்தி

நான் உங்களின் நம்பிக்கைக்குரிய அனந்தி சசிதரன் (எழிலன்) இப்படிச் சொல்வதற்கான உரிமையுடன் கூடிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் எனக்கு தந்து பிரமிப்பூட்டும் வெற்றியை எனக்கு வழங்கி, என்னை உங்களுடைய பிரதிநிதியாக சர்வதேசத்திற்கும் அடையாளப்படுத்தி – அங்கீகாரம் அளித்தமைக்கான நன்றியை எப்படி வெளிப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை.

என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குரியவளாக, என்றும் உங்களுக்கான பணியை உறுதியுடன் தொடர்வது தான் அர்த்தமுள்ள நன்றியாக இருக்கும் என்பதே எனது நம்பிக்கை.

எனக்கும் உங்களுக்குமான இந்த உறவு என்பது வெறும் அரசியல் சார்ந்த ஒன்றாக மட்டும் நான் கருதவில்லை.

இந்த உறவு இனம் சார்ந்த, மொழி சார்ந்த எல்லாவற்றிற்கும் அப்பால் மனிதநேயம் சார்ந்த உறவாகவே இதனை நான் நினைக்கிறேன். எமது மக்களினதும், மண்ணினதும் விடியலுக்காக தன்னை போராட்டத்தில் இணைத்துக்கொண்ட குடும்பத்தலைவனை போரில் பிரிந்து மூன்று பெண்குழந்தைகளுடன் நின்றிருந்த எனக்கு நீங்கள் நீட்டிய ஆதரவுக்கரம் வலிமையானது.

இதன் மூலம் என்னைப்போன்ற பெண்கள் ஆயிரமாயிரமாக அவலம் சுமந்து வாழும் இந்த நாட்டில் என்மூலமாக அவர்களுக்கும் வாழ்வியல் குறித்த நம்பிக்கையை மிகத் தெளிவாக வழங்கியிருக்கிறீர்கள். இன விடுதலைக்கு போராடிய போராளிகளை, அவர்களின் குடும்பங்களை நமது சமூகம் அநாதரவாக விட்டுவிட்டது என்று மேற்கொள்ளப்பட்டு வந்த பரப்புரையை பொய்யுரையென நிருபித்து காட்டியுள்ளீர்கள்.

இத் தேர்தலில் நீங்கள் எனக்களித்துள்ள ஒவ்வொரு வாக்கும் ஆணித்தரமாக அதனை சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக்காட்டியுள்ளது. சலுகைக்காக கைகட்டி சேவகம் செய்யாதபடி எங்களை நையாண்டி செய்தோரை நாடு சிரிக்க வைத்துள்ளீர்கள். ஒப்பற்ற வீரம், அப்பழுக்கற்ற அர்ப்பணிப்பு, பூரிக்கவைக்கும் தியாகம் அத்தனையும் மறந்து போக நாம் ஒன்றும் ஈனம் கெட்ட பிறப்புக்கள் அல்ல என்பதை உறுதிபட உங்களின் வாக்குகள் மூலம் உரத்து –உலகுவியக்க- சொல்லியுள்ளீர்கள். மெய்சிலிர்க்க வைத்துள்ளீர்கள்.

உங்கள் உணர்வுகளுக்கும், எனது நியாயம் கோரும் குரலுக்கும் அங்கீகாரம் கிடைத்துவிடக்கூடாது என்ற தீவிரத்துடன் – நுட்பமாக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிகளையும், தில்லுமுல்லுகளையும் நீங்கள் உதாசீனம் செய்தவிதம், கம்பீரமான இன உணர்வின் வெளிப்பாடே!

எங்கள் பகைவர் எஙகோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்குதமிழர்க்கு இன்னல் விழைந்தால்
சங்காரம் நிஜமன்று சங்கே முழங்கு…

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளே இத்தருணத்தில் நினைவுக்கு வருகிறது.

ஒரு கட்டத்தில் பகிரங்கமாகவே மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி என்பது நீங்கள் அறிந்த விடயமே.

எனது ஆதரவாளர்களான சகோதரர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள், பலமாக காயப்படுத்தப்பட்டார்கள். எனது செய்திகளை இருட்டடிப்புச் செய்தார்கள்
என்னை தோல்வியுறச் செய்வதாக சபதமேற்ற மனிதர்களும் இல்லாமலில்லை. தேர்தல் தினத்தன்று நான் அரசுடன் இணைந்துவிட்டதாக அபத்தமான செய்தி தாங்கிய போலிப்பத்திரிகை வெளியிட்ட கையாலாகாத்தனமும் அரங்கேறியது. காணாமல் போன எனது கணவரை விடுவிக்க அரசியல் பேரத்தில் நான் ஈடுபட்டிருப்பதாக அதில் பிரச்சாரம் செய்ய முயன்ற அநாமதேயங்களை காலம் அடையாளப்படுத்தவே செய்யும். எனக்கு வாக்களித்த 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை, அவர்களது இனமான உணர்வை தெளிவாக்க பல்வேறு வழிகளிலும் உதவிய அனைத்து ஊடகங்கள்- ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எனது ஆத்மார்த்த நன்றிகள்.

என்னை எதிர்த்தவர்கள், எதிர்த்து பிராச்சாரம் செய்தவர்கள், தாக்கியழிக்க முயன்றவர்கள் அவதூறு செய்தவர்கள் என அனைவருமே அவர்களையறியாமலேயே அவர்களின் கோமாளித்தனமான செயற்பாடுகளால் எனது வெற்றிக்கு உதவவே செய்துள்ளனர். ‘அனந்தி’ என்ற அதிகம் முகமறியாத எனக்கு – தன்மான – இனமான உணர்வுடன், ஆபத்துக்கள், அச்சுறுத்தல்கள் அனைத்திற்கும் அஞ்சாமல் தாமாகவே முன்வந்து எல்லாவகையிலும் எனது வெற்றிக்கு உதவிசெய்த இளையதலைமுறை இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் எப்படி நன்றி சொல்லமுடியும்? அவை காலத்தினாற் செய்த உதவிகள்.

மேலிடத்து அறிவுறுத்தல் – அச்சுறுத்தல் நிர்ப்பந்தங்களை அச்சமின்றி புறம்தள்ளிவிட்டு தம் மனச்சாட்சிக்கு மதிப்பளித்து எனக்கும் பெருமளவில் தபால்மூலம் வாக்களித்த அரச ஊழியர்களின் உணர்வுக்கு எனது நன்றிகள்.
எனது வெற்றிக்கும், வெளியே இருந்து ஆதரவு அளித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட சக கட்சிகளுக்கும் என்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்ற மனித நேயமற்ற செயற்பாடுகள் தார்மீக உணர்வுடன் கண்டித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றிகள்.

என்னை வேட்பாளராக ஏற்று, வேண்டிய உதவிகள் ஆலோசனைகள் வழங்கிய எனது கட்சித்தலைமைக்கும், சகோதர வேட்பாளர்களுக்கும், ஏனைய ஆதரவாளர்களுக்கும் அவர்களோடு இணைந்து எமது, இனத்தினதும், மண்ணினதும், மொழியினதும் மேன்மைக்காக உறுதியுடன் எந்த வல்லாதிக்க சக்தியினதும் அழுந்தங்களுக்கு அடிபணியாமல் செயலாற்றுவதே நன்றியென நினைக்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக – நிலம்பெயர்ந்து – புலம்பெயர்ந்து தாயக நினைவுடன், தமிழ் உணர்வுடன், வாழும் எமது உறவுகள் காலமுணர்ந்து காட்டிய பேராதரவை எப்படி சொல்வது..? நேச உறவுகள் அனைவருக்கும் என் பாசமிகு நன்றிகள்.

காலமும் மக்களும் எமக்கிட்ட பணியை
நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்ல
உங்கள் கரங்களுடன் என் கரங்களை நன்றியுடனும்
உறுதியுடனும் பற்றிக்கொள்ளும்

உங்கள்
அனந்தி சசிதரன் (எழிலன்)

Leave a Reply

Your email address will not be published.