அமெரிக்கத் தூதரகம் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசாங்கம் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்ற போதிலும், அமெரிக்க தூதரகம் அவற்றை உதாசீனம் செய்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் அமெரிக்கத் தூதரகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. தேர்தல்களின் மூலம் மட்டும் ஜனநாயகத்தை நிலைநாட்டி விட முடியாது எனவும் வடக்கில் விரிவான சிவிலியன் நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்திருந்தது. யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் இலங்கையில் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கோதபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
சில வங்குரோத்து அடைந்த அரசியல் கட்சிகளும் அமெரிக்கத் தூதரகத்தின் கருத்துக்களுக்கு ஆதரவினை வெளியிட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிடக் கூடிய வகையில் 18;ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் சர்வதேச சமூகம், ஜெர்மனிய அதிபர் அன்ஜலா மொர்கல் மூன்றாம் தடவையாக தேர்தலில் வெற்றியீட்டியுளள்மை குறித்து மௌனம் காத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அன்ஜலா மொர்கலுக்கு சவால் விடுக்க எவருக்கும் தைரியம் இருக்கின்றதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நான்காம் கட்ட ஈழப்போரின் போது 6000 படையினரை இழக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு புலிகள் உத்தரவி;ட்ட போது சர்வதேச சமூகம் அதற்கு எதிராக கருத்து வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியை பிரிவினைவாதத்திற்கான அங்கீகாரமாக எவரேனும் கருதினால் அது பாரிய தவறாகும் என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.