புகலிடக்கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்த படகொன்று ஜாவா தீவுகளுக்கு தெற்கேயுள்ள கடற்பரப்பில் மூழ்கியுள்ளது.
இந்த படகில் பயணித்த சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 25 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி அபர்ட் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜாவாத் தீவுகளுக்கு செல்வதற்கு சில தினங்கள் எஞ்சியிருந்த நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும் விபத்தில் பலியானவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாக தெரியவரவில்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
புகலிடம் கோருவதற்காக அண்மைக்காலமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இருந்து இந்தோனேஷியா ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் சென்றிருந்தனர்.
இவர்களில் பலர் அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்டதுடன் மேலும் சிலர் வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.
ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க வேண்டாம் என அந்த நாடு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.